காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் வெளியேற முடிவு; மனுக்களையும் வாபஸ் பெற்றனர்

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரிட் மனுக்களையும் வாபஸ் பெற்றுள்ளனர்.

காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை காலி செய்யுமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பகுதியில் அத்துமீறி மேற்கொண்டுள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு பொலிஸார் உத்தரவிட்டிருந்தனர்.

ஆயினும் குறித்த விடயத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு அன்றையதினம் (05) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் காலி முகத்திடல் ´கோட்டா கோ கம' போராட்டப் பகுதியில் உள்ள சட்டவிரோத கூடாரங்களை இன்று (10) வரை அகற்றப்படமாட்டாது என, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவாதமளித்திருந்தார்.

குறித்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரிட் மனுக்களையும் அதனை தாக்கல் செய்த விண்ணப்பதாரர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

அத்துடன். காலி முகத்திடலில் உள்ள போராட்டக் களத்தை தாங்கள் காலி செய்வதாகவும் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இன்று முதல் போராட்டக்களத்தை விட்டு வெளியேறப் போவதாக அதன் பிரதான செயற்பாட்டார்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இதனை உறுதிப்படுத்தியுள்ள, சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, காலி முகத்திடலில் உள்ள போராட்டக் களத்தை காலி செய்வதற்கு போராட்டக்காரர்கள் கூட்டுத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆயினும், போராட்டக்காரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக பொருள்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...