கிழக்கில் பிரசித்தி பெற்ற உகந்தமலை, தாந்தாமலை முருகன் ஆலயங்களில் வெள்ளியன்று தீர்த்தோற்சவம்

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயம், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் ஆகிய தலங்களின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி தீர்த்தோற்வத்துடன் நிறைவு பெறவுள்ளது. உகந்தமலையானது பொத்துவில், தாண்டியடி, குமுக்கனுக்குச் செல்லும் நீண்டதொடு காட்டுப்பாதையில் அமைந்துள்ளது. இத்தலம் தமிழகத்து குன்றுதோறாடல் மலைக்கோயில்களை நினைவூட்டும் வகையில் அமையப் பெற்றுள்ளது. கடலலைகள் தாலாட்டிசைக்க, பச்சைபசேலென்ற காடுகள் கண்களைக் கவர மலையடிவாரத்தினிலே இவ்வாலயம் கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மட்டக்களப்பை வாழ்விடமாகக் கொண்ட மார்க்கண்டு முதலியார் 1885 இல் மலையடிவாரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். கோளாவிலைச் சேர்ந்த காளியப்பனைக் குருவாகவும் ஜெயசேகர - ஸ்ரீ வன்னிதிசாநாயக்க என்பவரை வண்ணக்கராகவும் நியமித்தார். பாணமையைச் சேர்ந்த இவர் சைவ பக்தியும் தமிழ்ப்பற்றுமிக்கவராவார்.

இத்தகைய சிறப்புமிக்க ஆலயம் முன்பு ஆலமரத்தடியில் மேடையில் வேல் மட்டும் வைத்து வழிபடப்பட்ட கோயிலாக காணப்பட்டது. ஆலயத்தில் உள்ள வெண்நாவல் மரமே தலவிருட்சமாகும்.

உகந்த மலையை அண்மியுள்ள பாணம, கூமுனை போன்ற இடங்கள் ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் வாழ்ந்த இடங்களாவதோடு அவர்களின் வழித்தோன்றலான வேடர் இன்றும் வாழுமிடங்களாகவும் கொள்ளப்படுகின்றன. இவர்களுக்குரிய வேல் வணக்கமே இப்பகுதியில் நிலவியது என்பதற்கு இவ் வாலயம் சான்றாக உள்ளது.

முருகப்பெருமான் கதிர்காமத்தில் குடிகொள்வதற்கு முன்பே உகந்தையில் அமர்ந்ததாக வரலாறு கூறப்படுகின்றது. ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் இருமலைக் குன்றுகள் அமைந்துள்ளன. முதலாவது மலை வள்ளி மலை எனவும் அடுத்த மலை பிள்ளையார் மலை எனவும் அழைக்கப்படுகின்றது. ஆலயத்தில் இருந்து கடற்கரைப் பக்கமாக மேலும் மூன்று மலைப் பாறைகள் அமைந்துள்ளன.

கதிர்காமத்தை போலவே இங்கு ஆடிப் பூரணையில் தீர்தோற்சவம் நடைபெறுகின்றது. அந்த வகையில் 29.07.2022 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியது. எதிர்வரும் 12.08.2022 ஆம் திகதி தீர்த்தமாடுவதுடன் திருவிழா நிறைவு பெறவிருக்கின்றன.

இதேவேளை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 22.07.2022 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 12.08.2022 ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவிருக்கின்றது. தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை கிராமத்திலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ளது. இவ்வாலத்திற்குச் செல்லும் வழிப்பாதைகள் யாவும் கதிர்காமத்தை போன்ற ஒரு சூழலையே கொண்டுள்ளது.

நீண்ட பரந்த பல குன்றுகளின் தொடர்ச்சியாக உள்ளது தாந்தாமலை. முற்காலத்தில் மழை பெய்யாமல் வரட்சி ஏற்பட்ட போது தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று தாந்தாமலையின் உச்சியிலுள்ள விநாயகர் பெருமானுக்குப் பொங்கல் விழா நடத்திய வேளை மழை பெய்ததாக வரலாற்றுக் கதைகள் சித்தரிக்கின்றன.

குளக்கோட்ட மன்னன் இலங்கையின் கிழக்குப் பக்கத்தில் எழு சிவமுருகன் ஆலயங்களை அமைத்தான். அவற்றில் ஒன்று தாந்தாமலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம். இவை 5 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும் தாந்தாமலையை பிரதேசத்தைஆட்சி புரிந்த மன்னன் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து 678 களஞ்சி பொன்னை வைப்புத்திரவியமாக இக்கோயிலுக்கு அளித்துள்ளான் என கோணேசர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்களையும் பண்டைய சரித்திரங்களையும் எடுத்தியம்புகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவம் 12 ஆம் திகதி நடைபெறுகிறது.

நாராயணபிள்ளை நாகேந்திரன் (ஓய்வுநிலை அதிபர்) களுவாஞ்சிகுடி


Add new comment

Or log in with...