சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும்

200 முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையினால் குறைவடையும்

அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி கிடைத்ததும் விலை குறைப்பு  தொடர்பான உத்தியோகபூர்வ  அறிவிப்பு வெளியிடப்படும்

சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் 200- முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையினால் குறைவடையும் என லிற்றோ கேஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

12. 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இவ்வாறு குறைவடையலாம் என்றும் ஏனைய சிலிண்டர் விலைகளும் அதற்கேற்ப மாறும் எனவும் அந்த வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. அதேவேளை, இன்றைய தினம் அமைச்சரவையில் அதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அமைச்சரவை மூலம் வெளிப்படுத்தப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படும் பட்சத்தில் உணவுப்பொதிகள் மற்றும் தேநீர் விலைகளில் விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படும் என சிற்றுண்டிச் சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் லிட்ரோ நிறுவனம் லாபம் ஈட்டி வருவதாகவும் அதற்கமைய கம்பனி செலுத்த வேண்டிய கடன்களை அடைத்து வருவதாகவும் நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். எரிவாயு விலை குறைப்பு தொடர்பான தகவலை நிதி அமைச்சும் நேற்று உறுதி செய்தது.

லிற்றோ சமையல் எரிவாயு விலை 4910 ரூபா முதல் 5220 ரூபா வரை விற்கப்படுகிறது.டொலர் நெருக்கடி காரணமாக சந்தையில் எரிவாயுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கருப்புச் சந்தையில் இதனை விட அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்கப்பட்டதோடு எரிவாயு பெற பல வாரங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக சீராக எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டதோடு தட்டுப்பாடின்றி எரிவாயு பெற வசதி அளிக்கப்பட்டது தெரிந்ததே.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...