கொள்கைப் பிரகடன உரையை உயிரூட்ட சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவது அவசியம்

ஜனாபதியின் கொள்கைப் பிரகடன உரையை வாழ்த்திய எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் சகலரும் சர்வகட்சி அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்புக்களை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டுமென, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில்  வெள்ளிக்கிழமை (05) மேற்கொண்ட செய்தியாளர் சந்திப்பிலே இந்த வேண்டுகோளை அசாத் சாலி விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் தீர்க்கதரிசனம் ஜனாதிபதியின் உரையிலுள்ளதாக சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் வாழ்த்தியுள்ளனர். இதை, வாழ்த்தியுள்ள சஜித் பிரேமதாஸ, நடைமுறைக்குச் சாத்தியமானால் இது நல்ல திட்டமாக அமையுமென்றும் தெரிவித்துள்ளார். எனவே, இது நல்ல திட்டமாக அமைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. எனவே, காலிமுகத்திடலில் எவருக்கும் வேலையில்லை. அவ்வாறு அரசியல் தேவைகள் இவர்களுக்கு இருந்தால், ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள இடங்களில்தான் ஆர்ப்பாட்டங்ள் நடத்த வேண்டும். சுற்றுலாத்துறையினரைக் கவரும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களை வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை இனியும் அனுமதிக்க முடியாது.

நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு முக்கிய பங்காற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை பொதுமக்கள் விரும்பவில்லை. இதனால்தான், அப்போது இருந்தது போன்று இந்த அரகலவுக்கு அதிகம் பேர் வருவதில்லை. தங்கங்களுக்கான வரிகளை தளர்த்தி, சந்தையை சுதந்திரமாக விடுவதுதான் அந்நியச் செலாவணியை உழைப்பதற்கான இலகு வழி. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையே இப்போது தேவைப்படுகிறது.

சொந்தப் பிரதேசங்களில் மாணவர்கள் கற்பது, அவரவர் பகுதிகளில் ஆசிரியர்களை கடமையாற்ற அனுமதித்தால்போக்குவரத்து, எரிபொருள் பிரச்சினை பெரிதாக ஏற்படாது.

இவ்வாறான நடைமுறைகளை மேல் மாகாண ஆளுநராக இருந்த காலத்தில் தாம் முன்னெடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...