லிட்ரோ சமையில் எரிவாயு சிலிண்டரின் விலையை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி குறைக்கவுள்ளதகா, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான (CEO) முதித பீரிஸ் தெரிவித்தார்.
அண்மையில் தாங்கள் அதிகரிப்பை மேற்கொண்டதிலும் பார்க்க எரிவாயுவின் விலை குறைக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப, ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதிக்குள் எரிவாயு விலையை குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது சரியான விலைக் குறைப்பை ரூபாவில் சொல்ல விரும்பவில்லை எனவும் ஒரு சிறிய குறிப்பைத் தருவதாக தெரிவித்த அவர், அண்மையில் நாம் ரூ. 50 இனால் எரிவாயு விலையை அதிகரித்திருந்தோம். நிச்சயமாக நாம் குறித்த அதிகரிப்பு தொகையிலும் பார்க்க குறைப்போம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் லிட்ரோ 12.5kg சிலிண்டரின் விலை ரூ. 2675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, லிட்ரோ 12.5kg சிலிண்டரின் உச்சபட்ச விலை ரூ. 4,860 இலிருந்து ரூ. 4,910 (கொழும்பு) ஆக ரூ. 50 இனால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment