அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை; 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

கடந்த மே 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 08 பேரை கைது செய்வதற்கு பொலிசார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கடந்த மே 09ஆம் திகதி நிட்ம்புவ நகரில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக மரணமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் மற்றும் பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் பொலிசார் பொதுமக்களிடம் இவ்வாறு உதவி கோரியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இதுவரை 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் CCTVகாட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவத்துடன் நேரடியான தொடர்புடையவர்கள் என CCTV காட்சிகளின் மூலம் அடையாளம் குறிக்கப்பட்டுள்ள மேலும் 08 பேரை அடையாளம் காண்பது தொடர்பிலயே பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை அடையாளம் காணப்படாத குறித்து சந்தேகநபர்களின் ஆளடையாளங்களை அறிவதற்காக அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறியத் தருமாறு, மனிதக் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பணிப்பாளர் 011 25 14 217
உதவி பணிப்பாளர் 071 85 92 868


Add new comment

Or log in with...