- புதிய கூட்டத் தொடரில் ஜனாதிபதி பிரசன்னம்
- பரிசீலனை செய்யப்படாத வினாக்கள், பிரேரணைகள் இரத்து
- பாராளுமன்ற தெரிவுக் குழு தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிதாக நியமிக்கப்படும்
பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று நள்ளிரவு (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதோடு, 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய, பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் பாராளுமன்ற இணைப்புக் குழுக்கள், உயர் பதவிகள்பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.
விசேடமாக 2022 ஜனவரி 18ஆம் திகதி முதல் ஜூலை 28ஆம் திகதி வரை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் காணப்பட்டதுடன், இக்காலப் பகுதியில் பாராளுமன்றம் 48 நாட்கள் கூடியுள்ளது.
இதேவேளை, நேற்றைய (27) பாராளுமன்ற அமர்வின் நிறைவில், எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது பாராளுமன்றம் ஓகஸ்ட் 03ஆம் திகதி புதிய அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளது.
2290-35_S.pdf (45.65 KB)
2290-35_E.pdf (30.75 KB)
2290-35_T.pdf (63.74 KB)
Add new comment