எரிபொருள் கொள்வனவுக்கு இந்த வருடம் ரூ. 6.7 பில்லியன் செலவாகும்

இலங்கையால் தாங்கிக்கொள்ளக்கூடிய தொகை அல்ல

எரிபொருளை சிக்கனமாக பாவிக்குமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை

எரிபொருள் கொள்வனவுக்காக இந்த வருடம் மாத்திரம் 6.7 பில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது தாங்கக் கூடியதல்லவென அமைச்சரவை பேச்சாளர் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனவே மக்கள் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்த வேண்டும் எனவும் QR முறை சரியாக செயற்படுத்தப்படும்

போது எரிபொருள் வரிசை குறையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

12 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிட்டது. எரிபொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட வரிசை உருவானது.சமையல் எரிவாயு இன்றி மக்கள் பாதிக்கப்பட்டனர். வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேவையான சமையல் எரிவாயு தருவிக்கப்பட்டுள்ளது. முதலாம் திகதி முதல் எந்த தட்டுப்பாடும் ஏற்படாதென லிட்ரோ தலைவர் அறிவித்துள்ளார். மின் வெட்டு நேரம் 03 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவம் செய்து இந்தளவாக குறைக்க முடிந்துள்ளது. விநியோகக் கட்டமைப்பு உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 2015 இல் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 2.7 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டது. ஆனால் 2022 இல் 6.7 பில்லியன் டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. செலவு 04 பில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. சிறிய ஏற்றுமதி வருமானமுள்ள நாட்டுக்கு இது தாங்க முடியாத செலவாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று 1.4 பில்லியன் டொலர்களே பெறப்பட்டது. துறைமுக நகர திட்டத்திற்கு 1.4 பில்லியன்கள் செலவானது.இந்த இரு திட்டங்களுக்கும் 2.8 பில்லியன்கள் செலவாகிறது. ஆனால் எரிபொருள் தருவிப்பதற்கு அதனை விட அதிக மடங்கு செலவாகிறது.

அதனால் எரிபொருள் விநியோகத்துக்கு QR முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.245 எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக 70,223 வாகனங்களுக்கு எரிபொருள் பெறப்பட்டுள்ளது.40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த QR முறைமை சரியாக செயற்படுத்தப்படுவதின் ஊடாக எரிபொருள் வரிசையை பெருமளவு குறைக்க முடியுமென எரிபொருள் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார். தனியார், பாடசாலை வேன், அம்பியூலன்ஸ், இ.போ.ச பஸ்களுக்கு இ.போ.ச டிப்போக்களினூடாக வழங்கப்படும். பொறுமையுடன் செயற்படுமாறும் நெருக்கடி நிலையிலிருந்து மீளவும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறும் கோருகிறோம். மாதாந்தம் பொருள் ஏற்றுமதி வருமானமாக ஒரு பில்லியன் டொலர் கிடைக்கிறது. அதில் 600 மில்லியன் டொலர் எரிபொருளுக்கு செலவானால் ஏனைய துறைகளுக்கு செலவிட பணம் மிஞ்சாது.ஆட்டோக்களுக்கும் ஜெனரேட்டர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்காக பொலிஸ் மற்றும் பிரதேச செயலகத்தினூடாக தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...