இன்று முதல் Litro எரிவாயு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும்

- மின்சார பட்டியலுடன் சமூகமளிக்கவும்
- 12.5kg எரிவாயு சிலிண்டர் ரூ. 4,860 இலிருந்து ரூ. 4,910

இன்று முதல் (11) லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறுமென லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில், இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, லிட்ரோ 12.5kg சிலிண்டரின் உச்சபட்ச விலை ரூ. 4,910 (கொழும்பு) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் லிட்ரோ 12.5kg சிலிண்டரின் விலை ரூ. 2675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அநாவசியமாக பதுக்கி வைத்தலை தவிர்க்குமுகமாக, எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்யும் போது மே மாத மின்சார பட்டியலை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றும் (11) நாளையும் (12) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, நாளை மறுதினம் (13) முதல் ஏனைய பிரதேசங்களில் சிலிண்டர் விநியோகம் இடம்பெறுமென நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் விநியோகம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இடம்பெறுமெனவும், அதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் 4 மாதங்களுக்கு அவசியமான ஒரு இலட்சம் (100,000) மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு கடந்த ஜூன் 30ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்பதுடன், இதற்கு உலக வங்கியிடமிருந்து 70 மில்லியன் டொலரை வழங்குமெனவும், மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்குமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய முதலாவது கப்பல் நேற்றை நாட்டை வந்தடைந்திருந்தது. அத்துடன் 3,740 மெட்ரிக் தொன் கொண்ட 2ஆவது கப்பல் இன்று (11) வந்தடையும் எனவும், 3,200 மெட்ரிக் தொன் கொண்ட 3ஆவது கப்பல் ஜூலை 15 இலங்கையை வந்தடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம்மாதம் கொள்வனவுக்காக கோரப்பட்ட மொத்த எரிவாயு 33,000 மெட்ரிக் தொன் என ஜனாதிபதி அலுவலகம் நேற்று விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...