மாணவருக்கு மிகுந்த பயன் தரும் கணினி தொழில்நுட்பத் தமிழ் நூல்

தமிழ்நாட்டின் எஸ். ஆர். எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் பா.சிதம்பரராஜன் மற்றும் கல்லூரியின் கணினி அறிவியல் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் க.சண்முகம் ஆகியோர் இணைந்து எழுதிய ‘எல்லாம் இணைய மயம்’(Internet of things concepts in Tamil) என்ற கணினித் தொழில்நுட்பத் தமிழ் நூலை எஸ்.ஆர்.எம் கல்வி குழுமங்களின் தலைவரும், எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை வேந்தருமான ரவி பச்சமுத்து அண்மையில் வெளியிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நூலில் பொருட்களின் இணையம் பற்றிய தகவல் அடங்கிய தொழில்நுட்பத் தமிழ் நூல் ஆகும்.இந்நூலில் பொருட்களின் இணையத்தை எப்படி உருவாக்குவது?, இதன் முக்கியத்துவம், செயற்பாடுகள், வன்பொருள், மென்பொருள் மற்றும் இதன் பயன்பாடுகள் பற்றி தெளிவாக விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் இணையமானது, சட்ட அமுலாக்க செயற்பாடுகள், திறன் மிகுந்த வீடுகள் உருவாக்கம், வேளாண்மை, உடல்நல கவனிப்பு, ஊடகம், சந்தையிடுதல் மற்றும் விளம்பரம் செய்தல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பட விளக்கத்துடன் நூல் ஆசிரியர்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.

இந்த தொழில்நுட்ப தமிழ் நூலை ரவி பச்சமுத்து வெளியிட்டு, தனது வாழ்த்துரையில் தெரிவித்ததாவது;

“இவர்கள் இருவரும் இணைந்து முன்னரே சிறப்பாக எழுதிய ‘வலைவாசல் வருக’ தொழில்நுட்பத் தமிழ் நூல் மணவை முஸ்தபா நினைவு அறிவியல் தொழில்நுட்ப நூலுக்கான விருதைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக நிறைய தமிழில் தொழில்நுட்ப நூல்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணியவாறு செய்து முடிக்கும் வகையில் இவர்களின் அடுத்த நூலாக ‘எல்லாம் இணைய மயம்’ என்ற தலைப்பில் பொருட்களின் இணையம் தொடர்பாக சிறப்பாக தொழில்நுட்பத் தமிழ் நூலை எழுதி உள்ளனர்.

இதுபோன்ற தமிழுக்கான முயற்சியை மேற்கொண்ட நூலாசிரியர்களான எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இந்த நூலானது மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் தனது வாழ்த்துரையில் அவர் தெரிவித்துக் கொண்டதுடன், இது போன்ற தொழில்நுட்ப தமிழ் நூல்கள் நிறைய உருவாக வேண்டும் என்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் முருகன் உட்பட பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.

அருள்நேசன்


Add new comment

Or log in with...