எரிபொருள் தட்டுப்பாடு; மலையகத்தில் பல்வேறு துறைகளில் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து தபால் சேவைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மலையகத்திலுள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதே நேரம் மலையகத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால்  மூடப்பட்டுள்ள போதிலும் வாகனங்கள் தொடர்ந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டு பலர் பல நாட்களாக காத்திருக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று மலையகத்தில் பொது போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றன. இதனால் நேற்று காலை வேலைக்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். பஸ் போக்குவரத்து குறைவடைந்தமையால் பெரும்பாலான பொதுமக்கள் புகையிரதங்களை தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்தி வருவதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மலையக புகையிரத பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலையக விவசாயத்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக தங்களது உற்பத்திகள் சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அந்நியச் செலவாணியினை பெற்றுத்தரும் தேயிலை உற்பத்தி  பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இதுகுறித்து கூடிய அக்கறையுடன் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு துறைகள் முற்றாக ஸ்தம்பிதமடையும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதேநேரம் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரானுவத்தினரால் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு டோக்கன்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...