உக்ரைனிய கடைத்தொகுதியில் ரஷ்யா தாக்குதல்: 16 பேர் பலி

உக்ரைனின் கிரமென்சோக் நகரில் ஒரு நெரிசல்மிக்க கடைத்தொகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடைத்தொகுதி மிகக் கூட்டமாக இருந்தபோது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. அப்போது கடைத்தொகுதியில் 1,000க்கும் அதிகமானோர் இருந்ததாகக் கூறப்பட்டது.

ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகத் துணிச்சலாக நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல் இது என்று உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி வர்ணித்தார். 59 பேர் காயமுற்றதாகவும் அவர்களில் 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

உலகத் தலைவர்கள் ஜி7, நேட்டோ உச்சநிலைச் சந்திப்புகளுக்குத் தயாராகும் வேளையில் ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனுக்குத் துணைநிற்பதாக ஜி7 தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஏனையோரும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜி7 தலைவர்கள் கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...