பிரபல நடிகை மீனாவின் கணவர் மரணம்; திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பு

1982இல் வெளியான ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் கதாநாயகியாகத் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் மீனா.

ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த IT யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா 'தெறி' படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் (48) சிகிச்சை பலனின்றி நேற்று (28) இரவு உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. ரஜினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, வித்யாசாகர் மரணத்துக்குக் காரணம் கரோனா வைரஸ் தொற்றுதான் என்று ஒரு முன்னணி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதே நேரம் அவர் நீண்டகாலமாக நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்தார் என்கிற தகவலும் வெளியானது. இதையடுத்து கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பின் காரணமாக வித்யாசாகர் மரணமடைந்திருப்பதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இவ்விரண்டு தகவல்களும் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது. அது வித்யாசாகரின் மரணம் குறித்த குழப்பத்தை விளைவித்தது. தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருக்கிறது. ஆனால், கோவிட்டுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், மரணங்களும் நிகழ்வதில்லை. இந்தச் சூழலில் கரோனா தொற்றின் காரணமாக வித்யாசாகர் உயிரிழந்தார் என்னும் செய்தி தொற்றுப் பரவல் குறித்த தேவையற்ற அச்சத்தை விளைவித்தது.

‘நாட்டாமை’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட திரைப்படங்களில் மீனாவுடன் இணைந்து நடித்திருக்கும் குஷ்பு இந்தக் குழுப்பத்தை நீக்கும் வகையிலும் கரோனா குறித்த அச்சத்தைக் களையும் வகையிலும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். “ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கோவிட் வந்தது. கோவிட் அவருடைய நுரையீரலின் நிலையை மேலும் மோசமாக்கியது. கோவிட்டாலேயே நாம் (வித்யா)சாகரை இழந்தோம் என்று சொல்வதன் மூலம் தவறான செய்தியைப் பரப்புவதையும் அச்சத்தை ஏற்படுத்துவதையும் தயவுசெய்து தவிர்த்திடுங்கள். ஆம் நாம் (கரோனா குறித்து) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்தான். ஆனால், தயவுசெய்து (பொறுப்புடன் செயல்படுங்கள்)..” என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

 

 

இதன் மூலம் நீண்டகால நுரையீரல் தொற்று இருந்ததாலேயே வித்யாசாகர் மரணமடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இடையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது அவருடைய மரணத்துக்கு முதன்மைக் காரணமோ நேரடிக் காரணமோ அல்ல. அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினை கோவிட் காரணமாக மேலும் மோசமாகியுள்ளது. அதோடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில் மாற்று நுரையீரல் கிடைக்கத் தாமதமானது வித்யாசாகரின் மரணத்துக்கு வித்திட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவே வித்யாசாகரின் மரணம் குறித்த சரியான முழுமையான செய்தி.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம் தொடர்பில் திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்
‛‛நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி ஐபிஎஸ், வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல ஓட்டு மொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்'' என்றார்.

சரத்குமார்
தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா அவர்களும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும். அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

குஷ்பு
ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


Add new comment

Or log in with...