'விக்ரம்' புயலினால் பாதிக்கப்பட்ட ரஜினி

மனதளவில் பாதிக்கப்பட்டதால், கமல் படத்தை முறியடிக்கும் திரைப்படத்தைத் தயாரிப்பதில் பிரயத்தனம்

விக்ரம் படம் வெளியான பின்னர் ரஜினிகாந்த் மிகவும் குழப்பத்தில் உள்ளார். விக்ரம் படத்தின் இமாலய வெற்றியானது ரஜினிக்கு தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சமீப காலமாக தனது பழைய படங்களை மீண்டும் விளம்பரப்படுத்துவதும் அப்படக்குழுவினரை சந்திப்பதும் என வேகம் காட்டுகிறார். அதாவது ரஜினி தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறாரா என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

'அண்ணாமலை' 30 ஆவது ஆண்டு விழாவை நேற்றுமுன்தினம் ரஜினி திரும்பிப் பார்த்துள்ளார். இது திரைத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாபா' படம் தோல்வியடைந்ததும் ரஜினி 'சந்திரமுகி' படத்துக்கு கோல்ஷீட் கொடுத்தார். "படத்தில் நடிக்க வடிவேலுவை புக் பண்ணுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். படத்தில் ரஜினியின் வழக்கமான கதை இல்லாவிட்டாலும் பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகளால் படம் ெவற்றியடைந்தது.

பொதுவாக வெற்றி, தோல்விகள் பற்றி அதிகம் பேசாத ரஜினி 'அண்ணாமலை' விழாவில் பேசிய வார்த்தைகள் அவர் எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தின. ரஜினி அரசியலில் தப்புக்கணக்கு போட்டிருக்கலாம். ஆனால் சினிமாவில் என்றுமே அவர் கணக்கு தப்பிப் போனது கிடையாது. ராஜசேகர் தொடங்கி சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா, தற்போது நெல்சன் என காலத்துக்கு ஏற்றாற் போல் இயக்குநர்களை தெரிவு செய்வது அதில் வெற்றியும் காண்பது ரஜினியின் வழக்கம். எந்த பெரிய நிறுவனமும் இவரை வைத்து தைரியமாக படம் பண்ணி இலாபம் பார்க்க தயங்குவதில்லை. எம்ஜிஆருக்கு அடுத்த முடிசூடா மன்னன் ரஜினி. அதேபோல் தனது வெற்றிக்கான ஆட்கள், தனது பலத்துக்கேற்ற படம் தயாரிக்கும் நிறுவனம், இயக்குநர் என தெரிவு செய்வதில் ரஜினி தேர்ந்த மனிதர். 70 வயதிலும் முன்னணியில் மூச்சிரைக்காமல் ஓடும் குதிரை அவர். ஆனாலும் விக்ரம் வெற்றியானது ரஜினியை மனதளவில் பாதித்துள்ளது. கமலின் வெற்றியானது தன்னை ஓரங்கட்டி விட்டதென்றே அவர் கருதுகின்றார். கமல் கொடுத்த 'மெகா ஹிட்' விக்ரம் திரைப்படம் ரஜினியை பின்தள்ளி விட்டதென்பதே உண்மை. தற்போது என்னவென்றால் ரஜினிக்கு பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. 'இமேஜ்' பற்றி கவலைப்படாத ரஜினி இப்போது கவலையில் உள்ளார்.

தரமான படத்தை கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் ரஜினி. கே.எஸ்.ரவிகுமார், பொன் குமரன் ஆகியோரை சேர்த்து கதையை வலுவாக்க சொல்லியிருக்கிறார். படத்தின் மீது அக்கறை காட்டும் அதே நேரம் பூக்கடைக்கு விளம்பரம் தேவைப்படாத ரஜினியே தற்போது தனது பழைய படங்களின் வெற்றி நாட்களை நினைவுகூரும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் போட்டோ எடுப்பது போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றார்.


Add new comment

Or log in with...