பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கொள்ளை இலாபமீட்டும் வர்த்தகர்கள்!

- மலையக மக்களின் வேதனை இது!

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நாட்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. உரிய பகீர்வீட்டு முறைமை இல்லாததன் காரணமாகவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வரப்படும் நாள் பற்றிய சரியான விளக்கங்கள் இல்லாதவன் காரணமாகவும் மக்கள் இவ்வாறு வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் மக்கள் ஆத்திரமடைந்து வீதிகளை மறித்து போராட்டங்களிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் வீதியில் செல்லும் மக்களும் அன்றாடம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தொழில் துறைகள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகள் பாதிப்படைகின்றன. மக்கள் பிரதிநிதிகள் சிலர் மக்களின் தேவை எவையென்று அறியாது மக்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கி தங்களது அரசியல் இருப்பைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுகின்றனர்.

மலையகத்தைப் பொறுத்தவரை இன்று பொதுமக்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், வீட்டு சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான நாளாந்தம் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க 'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பதுபோல ஒரு சில சுயநல அதிகாரிகள் பணம் உழைக்கும் காரியத்தில் ஈடுபடுகின்றனர்.

வியாபாரிகள் பலர் பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளை இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளோ மக்கள் படும் அவலங்களை கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றனர். இதனால் வறிய மக்கள் விரக்தியிலும் துன்பத்திலும் உள்ளனர்.

கே. சுந்தரலிங்கம் - ஹட்டன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...