கொழும்பு - கொம்பனித்தெரு ஜாவாலேன் அணி வெற்றி

சம்பியன்ஸ் லீக் 2022 உதைபந்தாட்ட தொடர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து வரும் சம்பியன்ஸ் லீக் 2022 உதைபந்தாட்ட தொடரின் மூன்றாம் வாரத்திற்கான போட்டியில் மிகப்பலம் கொண்ட அணியான கொழும்பு கொம்பனித்தெரு ஜாவாலேன் அணி கோல் மழை பொழிந்து இரசிகர்களை அதிரவைத்தது.

ஜவாலேன் வீரர் ஒலுவ செவுன் ஓலேவல 05 கோல்களை பெற்று ஹெட்ரிக் சாதனையை சுவீகாரம் செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை (26) குருநாகல் மல்லவபிட்டி விளையாட்டரங்கில் ஜவாலேன் அணி எதிர் அநுராதபுரம் சொலிட் அணிக்கும் இடையிலான போட்டியின் போது 07-−01 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஜவாலேன் வெற்றியை சுவீகரித்தது.

இப் போட்டியின் 14 ஆவது நிமிடத்தில் சொலிட் அணி வீரர் சமித் மதுரங்க தனது அணிக்கான முதலாவது கோலை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 32 ஆவது நிமிடத்தில் ஜவாலேன் அணி வீரர் நவீன் ஜூட் ஒரு கோலை பெற்றார்.மீளவும் ஜவா லேன் அணி வீரர் ஒலுவ செவுன் ஓலேவல 39 நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார்.

போட்டியின் இரண்டாம் பாதியின் 58, 59, 70, 78, ஆவது நிமிடங்களில் ஜவா லேன் அணி வீரர் ஒலுவ செவுன் ஓலேவல அதிரடியாக கோல்களை பெற்று ஜவா லேன் அணியை வெற்றி பெற வைத்தார்.இப் போட்டி 07-−01 என்ற வித்தியாசத்தில் ஜவாலேன் அணி பெருமை கொண்ட வெற்றியை தன் வசமாக்கிக் கொண்டது.

அன்றைய தினம் இச்சுற்றின் மற்றுமொரு போட்டி பெலிகன்ஸ் அணி- இலங்கை போக்குவரத்து சபை அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் பெலிகன்ஸ் அணி ஜெய் குமார் ஒரு கோலை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 06, 13 ஆவது நிமிடங்களில் இவ் அணியின் வீரர் நெப்ஷான் மொஹமட் இரு கோல்களை சுவீகரித்தார். இரண்டாம் பாதியின் 86 ஆவது நிமிடத்தில் பெலிகன்ஸ் வீரர் ரன்மல் ரத்வத்த ஒரு கோலை பெற இப் போட்டியில் எவ்வித கோலையும் இலங்கை போக்குவரத்து சபை அணி பெறாத நிலையில் 04−00 என்ற நிலையில் பெலிகன்ஸ் வெற்றி பெற்றது.

மாத்தறை கொடவில மைதானத்தில் பேருவளை சுப்பர்சன் இலங்கை பொலிஸ் அணிகள் மற்றுமொரு போட்டிக்காக களம் இறங்கினர்.

இப் போட்டியில் சுப்பர்சன் வீரர் போசோ காவா பேனா 80 ஆம் நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார்.இப் போட்டியில் பொலிஸ் அணி எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் 01 -00 என்ற முடிவில் சுப்பர் சன் வெற்றியை சுவீகரித்தது.

வட கொழும்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...