"உன்மீது அன்பு கூருவது போல் உன் அயலவர் மீதும் அன்பு கூருவாயாக"

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரண்டு முக்கிய மறையுண்மைகளில் உள்ளடக்கலாம் இறையன்பு,பிறரன்பு என்பதே அவையாகும். அன்பைப் பற்றி பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது. "என் உடைமைகளை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லை

என்றால் எனக்கு பயன் ஒன்றும் இல்லை."

"அன்பு பொறுமை உள்ளது. தன்னலம் நாடாது. தீங்கு நினையாது." (கொரிந்தியர் 13:3,4)" உன்மீது அன்பு கூருவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (உரோமையர். 13:9)

அன்பே கடவுள். கடவுளே அன்பு என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் திருவுருவம் திரு இருதயத்தைவெளிப்படுத்தியவாறு வரையப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் திரு இருதய படங்கள் இல்லாத கத்தோலிக்க  வீடுகளே கிடையாது என கூறலாம்.

கத்தோலிக்கத் திருச்சபை ஜூன் மாதத்தை திரு இருதய வணக்க மாதம் என அழைக்கின்றது. ஆலயங்களிலும் வீடுகளிலும் வழிபாடுகளும் சிறப்பு திருப்பலி பூசைகளும் நடைபெற்று வருகின்றன.

ஆண்டவர் இயேசுவின் இருதயத்தில் அன்பு, இரக்கம், மன்னிப்பு, அரவணைப்பு மற்றும் ஆறுதல் போன்ற பண்புகளே நிறைந்துள்ளது.

இருகரம் விரித்து இதயத்தைத் திறந்தவராய் காத்திருக்கும் ஆண்டவர் இயேசு அன்று தம் போதனைகளைக் கேட்க வந்த மக்களின் பசியைப் போக்கினார்.

பேய்களை ஓட்டினார். மரித்தவரை உயிர்ப்பித்தார். சமூகம் தீண்டல் ஆகாது என ஒதுக்கிய தொழுநோயாளிகளை தொட்டுக் குணப்படுத்தினார். அன்றைய மக்களுக்கு அவற்றையெல்லாம் செய்த இயேசுவின் திருஇருதயம் இன்றும் நமக்கு இவற்றை செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றது.

"சுமை சுமந்து சோர்ந்து இருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் என்று மத்தேயு 11ஆம் அதிகாரம் தெரிவிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் செயற்படுகின்ற தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,சமூக அமைப்புக்கள் அன்பு பணிகளில் ஆர்வம் காட்டுகிறது என்றால் அதற்கு மூல காரணம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளே.

இயேசு கிறிஸ்துவின் அன்பு எனும் தத்துவம் தான் நடமாடும் புனிதையாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் அன்பு பணிகளை உலகமெங்கும் வியாபிக்கச் செய்தது. இயேசுவின் அன்பை உணர்ந்து அவரது இதயத்தை போல் கனிவான இதயம் கொண்டவர்களாக  நாமும் வாழ்வோம்.

அன்பை அடிப்படையாகக் கொண்டு நம் அயலாரையும் அன்பு செய்வோம்.இந்நாட்களில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நம்மாலான உதவிகளை செய்வோம்.

பிலோமினா சத்தியநாதன்


Add new comment

Or log in with...