ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் இரண்டாவது தொகுதி நிவராணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
ஆப்கானின் பக்தியா மாகாணத்தில் ஜுன் மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பத்தினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு 1455 பேர் காயமடைந்துள்ளனர். 1500 வீடுகள் அழிவுற்றுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக மிக மோசமான அழிவுகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் மக்களுக்காக உடனடியாக இரண்டு விமானங்களில் 27 தொன்கள் அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா, இரண்டு நாட்களில் இரண்டாவது தொகுதி நிவாரணப்பொருட்களையும் அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தனது ட்வீட்டில் 'பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் மக்களுக்கான இந்தியாவின் இரண்டாவது தொகுதி நிவாரண உதவி காபூலை சென்றடைந்துள்ளது' என்றுள்ளார்.
இந்நிவாரண உதவிப் பொருட்களில் கூடாரங்கள், போர்வைகள், உறங்கக்கூடிய பாய்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கியுள்ளன. இப்பொருட்கள் ஐக்கிய நாடு சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் ஆப்கானிஸ்தான் செம்பிறைச் சங்கத்திடம் காபூலில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டதும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானியர்களுக்காக முதலில் இரண்டு விமானங்களில் இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவியில் 5,400 அறுவை சிகிச்சைகளுக்குப் போதுமான 10 தொன் மருந்துவப்பொருட்களும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 36 ஆயிரம் பேருக்கு மூன்று மாதங்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தக்கூடிய மருந்துப்பொருட்களும் அடங்கி இருந்தன.
'இந்தியா எப்போதும் போன்று, ஆப்கான் மக்களுடன் ஒற்றுமையைப் பேணி வருகிறது. அவர்களுடன் நாங்கள் பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது' என்று இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மனிதாபிமான உதவிகளை வழங்கும் பங்குதாரர்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கவென இந்தியா காபூலிலுள்ள தூதரகத்திற்கு குழுவொன்றையும் அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து தலிபான் பேச்சாளர் அப்துல் கஹர் வெளியிட்ட அறிக்கையில், 'இராஜதந்திரிகளையும் தொழில்நுட்பக் குழுவையும் காபூலிலுள்ள தூதரகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்கவும் ஆப்கான் மக்களுடனான அவர்களது உறவையும் மனிதாபிமான உதவிகைளயும் தொடர இந்தியா எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Add new comment