மனித ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துகளை வழங்கும் பாரம்பரிய சிறுதானியங்கள்

தற்கால நவீன உலகில் வேலைப்பளு, நேரப்பற்றாக்குறை, தொலைபேசி போன்ற நவீன உபகரணங்களின் தாக்கம் காரணமாக நாம் எமது ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பது என்பது ஒரு பாரிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

நாம் எமது அன்றாட வாழ்வில் சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் ஒழுங்கான முறையில் பின்பற்றினால் மாத்திரமே தனிநபர் ஆரோக்கியத்தை பேண முடியும். அதன் மூலம் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

தற்போதைய விஞ்ஞான உலகில் உணவு பற்றிய பல உண்மைகளை நாம் உணர்ந்து கொள்வதில்லை. உணவு என்பது மனிதனை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மட்டுமன்றி மனதிற்கு உன்னதமான உணர்வைத் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் நாம் மேலைத்தேய உணவுவகைகளில் மோகம் கொண்டு எமது நாவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே உணவு வகைகளை உட்கொள்கின்றோம். இவ்வுணவுகள் எமக்கு உகந்ததா என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

தானியங்கள் என்பவை இயற்கை அன்னை எமக்குக் கொடுத்த ஒரு அருங்கொடை. நமது மூதாதையர் காலத்திலிருந்தே உணவாக பயன்படுத்தப்பட்டு வந்த சிறுதானியங்களின் மகத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு விளங்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஏனெனில் அந்த அளவுக்கு மக்களிடம் சிறுதானியங்களின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. நாம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கியமானவை. இவற்றை 'கிராமத்து உணவுகள்' என்றும் கூறுவர். உணவுசார்ந்த நிபுணர்கள் கூட சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

பொதுவாக சிறுதானியங்கள் சாம்பல், வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன. உடலுக்குத் தேவையான அனைத்து போசாக்குகளும் சிறுதானியங்களில் காணப்படுகின்றன.இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்.

சிறுதானியங்கள் அளவில் நெல்லை விட சிறிதாக இருந்தாலும் அளவுக்கதிகமான நன்மைகளை உண்டாக்குகின்றன. இச்சிறுதானியங்களில் புரதச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, செம்பு, பொசுபரசு, கல்சியம், மக்னீசியம், விட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள் போன்றன காணப்படுகின்றன.

கேழ்வரகு இலகுவில் சமிபாடடையக் கூடியதாக இருப்பதனால் ஆறு மாதக் குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும் கொடுக்கலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பினை அதிகரிக்க உதவும். உடலில் காணப்படும் அதிக கொழுப்பை கரைக்கவும் உதவும். உடலுக்கு குளிர்ச்சியையும், வலுவையும் தருவதுடன் உடல் சூட்டை சமநிலையில் பேணும். நார்ச்சத்துகள் இருப்பதனால் மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கின்றது. அத்துடன் மனஅழுத்தத்தை குறைப்பதுடன், ஆரோக்கியமான நித்திரை ஏற்பட வழிவகுக்கின்றது. மேலும் இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவையும் சீராக பேணக் கூடியதாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கும், இரத்த அழுத்த நோயாளிகளுக்கும் மிகவும் பொருத்தமான தானியமாகும்.

திணை நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவாகும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதுடன், வயிறு மற்றும் குடல் சார்ந்த உறுப்புகளுக்கு வன்மை உண்டாக்குகின்றது.

அத்துடன் புரதச்சத்து காரணமாக உடலின் தசைகள் வலிமையடைவதுடன், உடற்பருமனை சீராக்கும். விட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் திணை முக்கிய பங்கு வகிக்கிறது.

சாமை அரிசியானது வயிறு சார்ந்த நோய்களை தீர்க்கக்கூடியதாகவும், மலச்சிக்கலை போக்கக்கூடியதாகவும், நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவாகவும் கருதப்படுகின்றது. இதில் நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் இரும்புச்சத்து காணப்படுகின்றன.

வரகரிசியில் புரதச்சத்து, இரும்புச்சத்து, மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் காணப்படுவதானால் உடல் பருமனை சீராக்கவும், மாதவிடாய் சார்ந்த கோளாறுகளை நீக்கவும் பயன்படுத்தலாம். இதில் நார்ச்சத்து, பொஸ்பரஸ், மக்னீசியம், மங்கனீசு, கல்சியம், செம்பு, மற்றும் விட்டமின் பி போன்றன காணப்படுகின்றன.

கம்பு அரிசியானது உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடற்பருமனை சீராக்க உதவும். இதில் விட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.

சோளமானது உடலுக்கு வலிமையை தருவதுடன், வயிற்றுப்புண், உடற்பருமன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது.

இவற்றைத் தவிர 'இளைத்தவனுக்கு எள்ளு' 'கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கேற்ப கொள்ளானது உடலிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அத்துடன் உடலுக்கு வன்மையையும், என்பு மற்றும் நரம்புகளுக்கு வலுவையும் தருவதுடன் மாதவிடாய் சார்ந்த கோளாறுகள், கை கால் மூட்டு வலி, நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், சமிபாடின்மை, கொலஸ்ரோல் போன்ற பிரச்சினைகளையும் போக்கவல்லது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன.

உலக மக்களின் நலன் கருதி ஐ.நா. சபை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டினை 'சர்வதேச சிறுதானிய ஆண்டு' என அறிவித்துள்ளமை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விடயம். சிறுதானியங்களின் தேவை, பயன்பாடு, அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மால் இயன்றதை செய்யவேண்டும்.

வைத்திய கலாநிதி செல்வி வினோதா சண்முகராஜா
(சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

கலாநிதி திருமதி கௌரி ராஜ்குமார்
(சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...