இந்திய நிவாரணம்: தோட்ட மக்களிடம் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து கட்டணம் மீள கையளிப்பு

- செந்தில் தொண்டமான் நடவடிக்கை

இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களுக்கு பசறை டெம்மேரியா தோட்ட  முகாமையாளரால்  பொருட்களை  ஏற்றி வந்த போக்குவரத்து செலவுக்கென மக்களிடம் 50 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டான் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டிருந்தது.

அதனையடுத்து செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாக பணிப்பாளரை தொடர்பு கொண்டு வசூலிக்கப்பட்ட பணத்தை உடனடியாக அந்தந்த தோட்டத்தை சேர்ந்த மக்களிடம்  மீள வழங்குவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அப்புத்தளை தொட்டுலாகலை பகுதியில் பால்மாவை பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டில் போக்குவரத்து செலவுக்கென பிரதேச சபையைச் சேர்ந்த சிலரால் பொதுமக்களிடம் 50 ரூபா அறவிடப்படுவதாக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளர், அப்புத்தளை பிரதேச செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் விசாரணை மேற்கொள்ளமாறு  செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்ததை தொடர்ந்து, பிரதேச செயலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் பிரகாரம் 50 ரூபாய் வீதம் 25 பேரிடம் வசூலித்த பணத்தை மீண்டும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச செயலரால்,செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...