- சிரமத்திற்கு நடுவில் பாடசாலைகளை நடாத்திய அதிபர், ஆசிரியர்களுக்கு தலைவணங்குகிறோம்
கடந்த வாரம் நடைபெறாத நகர்ப்புற பாடசாலைகளை எதிர்வரும் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் மாத்திரம் நடாத்த தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு கடந்த வாரம் கொழும்பு மற்றும் அதனை அண்டிய மற்றும் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளை கடந்த வாரம் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில்,
2022 ஜூன் 27 முதல் 2022 ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை பின்வருமாறு நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது...
- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள் இல்லாத கிராமப்புற பாடசாலைகளில், கடந்த வாரம் ஜூன் 20 - ஜூன் 27 வரை பாடசாலைகள் இடம்பெற்றது போல் வழக்கம் போல் பாடசாலைகளை நடாத்த வேண்டும் என்பதுடன், குறித்த பாடசாலைகளில் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்குகின்ற ஆசிரியர்களுக்கு, அவர்களது தனிப்பட்ட விடுமுறைகளிலிருந்து விடுவிப்பதுடன், நெகிழ்வான அட்டவணையை தயாரித்தல்.
- நகர்ப்புறங்களில் கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகள், இவ்வாரத்தில் 3 நாட்கள், அதாவது செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை நடாத்தப்பட வேண்டும். இப்பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் எத்தனை நாட்கள் நடாத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. (மாணவர்கள் வருகை தராத நாட்களில் ஒன்லைன் கற்பித்தல் /பணிகளை வழங்குதல் /வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளை தொடருதல்.)
- போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு இந்நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஜூன் 20 - 24 வரை போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளை நடாத்துவதற்கு பங்களித்த அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வி அமைச்சு தலைவணங்குகிறது.
Add new comment