இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்திய குழுவினர் இலங்கையில்

​​இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடி மதிப்பீடு செய்ய இந்திய உயர் அதிகாரிகள் குழுவொன்று இன்று (23) இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா (Vinay Kwatra) தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரே இன்று (23) முற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இந்திய பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத் (Ajay Seth) மற்றும் இந்திய அரசின் பிரதான பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி. ஆனந்த நாகேஸ்வரன் (V. Anantha Nageswaran) ஆகியோர் இத்தூதுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினர், குறித்த இந்திய பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற விமான நிலையத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தணிக்க இலங்கைக்கு உதவிய முக்கிய நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது.

உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியதோடு, இதில் பெரும்பகுதி அந்நாட்டிலிருந்து எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்தப்பட்டது.

இதேவேளை, இதுவரை 4 பில்லியன் டொலர்களை இந்தியா கடனாக வழங்கியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (22) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வரும் நிலையில், குறித்த குழுவினர் இன்றையதினம் (23) இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...