நாட்டின் பாரதூரமான நிலைமையை வெளிப்படுத்தியுள்ள பிரதமரின் உரை

பொருளாதார நெருக்கடி காரணமாக எமது நாடு மிக மோசமான பாதிப்புக்குள் சிக்கிக் கொண்டுள்ளதென்பது வெளிப்படையான விடயம். பொருளாதார நெருக்கடி காரணமாக வறிய மக்கள் மாத்திரமன்றி, செல்வந்த மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்து விட்டன. அவற்றுக்கு பலத்த பற்றாக்குறையும் நிலவுகின்றது. எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் இன்னுமே நீண்ட கியூவரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகின்றது. மொத்தத்தில் கூறுவதானால் மக்களின் துன்பங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பொருளாதார நெருக்கடிக்குள் அவதியுறுகின்ற மக்கள் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றார்கள். எமது அரசியல்வாதிகள் மீது குறை கூறுகின்றனர். நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்களில் குறை உள்ளதாகக் கூறுகின்றனர். பொருளாதார மீட்சியைப் பொறுத்தவரை புதிய அணுகுமுறை தேவையென அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். இவ்வாறெல்லாம் மக்கள் கூறுவதில் நியாயம் இல்லாமலில்லை. கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் தவறுகள் உள்ளதாலேயே நாட்டின் பொருளாதாரம் இத்தனை மோசமாக வீழ்ச்சியடைந்ததென்ற கருத்தில் உண்மை உள்ளது.

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக தற்போது புதிய அணுகுமுறையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்திட்டங்கள் வெற்றியடையுமென்பதில் சந்தேகம் எதுவும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை முற்றாக மீட்டெடுப்பதென்பது உடனடியாக சாத்தியமாகப் போவதில்லை. அதற்கு சில காலம் செல்லும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தையே பல தடவைகளில் வலியுறுத்தி வருகின்றார். நாடு இன்றைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சில காலம் தேவை என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளார். காலஅவகாசமும், மக்களின் சகிப்புத்தன்மையும், அர்ப்பணிப்பும் இருந்தாலேயே இன்றைய சவாலை வெற்றி கொள்ள முடியும் என்பதுதான் பிரதமரது கருத்தின் உள்ளார்ந்த அர்த்தம் ஆகும்.

இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றியிருக்கும் உரையும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, அதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தனது விசேட உரையின் போது தெளிவுபடுத்தியுள்ளார்.

'சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதே தற்போது நாட்டுக்குள்ள ஒரே வழியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்படுத்தல் இல்லாமல் வேறு எந்த சர்வதேச நிதி நிறுவனத்திடமும் கடன் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஜூலை மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும்' என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

'எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். நமது பொருளாதாரம் முழுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

முற்றிலும் சரிந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, குறிப்பாக அந்நிய கையிருப்பு குறைவாக உள்ள ஒரு நாட்டை மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனிலுள்ளது. இதன் விளைவாக, உலகில் எந்த நாடும் அல்லது அமைப்பும் எங்களுக்கு எரிபொருளை வழங்கத் தயாராக இல்லை. பணத்துக்குக் கூட எரிபொருளைக் கொடுக்க தயங்குகிறார்கள். இந்தியாவிடமிருந்தும் தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் உதவிக்குக் கூட எல்லையுண்டு. மறுபுறம், இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம் நமக்கு இருக்க வேண்டும். இவை கொடைகள் அல்ல' என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் அனைத்தும் அலட்சியப்படுத்தக் கூடியவையல்ல. வெறுமனே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாலோ அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதனாலோ இன்றைய பிரச்சினைகளுக்ெகல்லாம் தீர்வு கிடைத்து விடப் போவதில்லை. முதலில் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமையை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொள்வது அவசியம். பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் கோஷமிடுவதென்பது இலகுவான காரியம். ஆனால் பொருத்தமான திட்டங்களை முன்வைத்து செயற்படுத்துவதற்கு ஆற்றல், தகைமை அவசியமாகும்.

இன்று அரசு முன்னெடுத்து வருகின்ற திட்டங்கள் ஊடாக பொருளாதார மீட்சியைக் காண முடியுமென பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்ைக தெரிவித்துள்ளனர். எனவே பொறுமையும் சகிப்புத்தன்மையும் அர்ப்பணிப்புமே அவசியமாகும். மக்களைக் குழப்பத்துக்கு உள்ளாக்கும் முயற்சிகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுவது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல.


Add new comment

Or log in with...