கொழும்பு, அல்-ஹிக்மா கல்லூரிக்கு ரூ. 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு வசதிகள் கையளிப்பு

- மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைப்பு
- பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரதம அதிதியாக பங்கேற்பு

கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா  கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரிக்கான நவீன முறையிலான பாதுகாப்பு அறை, சிசிடிவி மற்றும் இன்டர்கொம்  முறைமைகளை உத்தியோக பூர்வமாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் மாணவ தலைவர்களுக்கான சின்னம்  அணிவித்தல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (16) கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் எம் எம் மஹ்சூர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் டாக்டர் எச் எம் எச் இஸ்மத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் பேச்சாளரும் தலைமைத்துவ விரிவுரையாளருமான கேர்ணல் நளின் ஹேரத் பிரதம அதிதியாகவும், இக்கல்லூரியின் பழைய மாணவியும், கொழும்பு கல்வி வலயத்தின் தமிழ் பிரிவுக்கான உதவி கல்வி பணிப்பாளருமான திருமதி எம் எச் மும்தாஸ் பேகம், தொழிலதிபர் சப்பார் ரய்னுடீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் தொழில் அதிபர்களான நிஸ்வான் ஆசிரியர், இர்ஷாட், ரில்வான் மற்றும் சபர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு முறைமையே இன்றைய தினம் பழைய மாணவர் சங்கத்தினால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதேவேளை, தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் சிரேஷ்ட மாணவத் தலைவர் மற்றும் தலைவி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 60 மாணவ தலைவர்களுக்கான சின்னங்களும் சூட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான ஸாதிக் ஷிஹான், பொருளாளர் எம் எஸ் எம் ஹஸன், உப தலைவர் எம் எஸ் எம் புஹாத் மேற்படி பாதுகாப்பு முறைமை திட்ட இணைப்பாளர் அஸ்ரின் ஹனீபா, பாடசாலை முகாமைத்துவ,  பழைய மாணவர் சங்க,  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...