இவ்வருட புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 1,585 பேருக்கு வாய்ப்பு

பயண ஏற்பாட்டுக் குழு அமைச்சர் ஹாபிஸ் நசீருடன் சந்திப்பு

புனித ஹஜ் பயண ஏற்பாட்டு குழுவினர் நேற்று (25) சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து பேச்சு நடத்தினர்.

அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இம்முறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கான வழிவகைகளை செய்வது பற்றியும்,  இதிலுள்ள தடங்கல்களை களைவது குறித்தும் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ்ஜுக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை. இந்நிலையில், இம்முறை 1,585 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கிடைத்துள்ளது. எனினும்,நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால்,பயண ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களுக்கு தீர்வுகாண்பது பற்றியே அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது.

பயண கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டியுள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுதல் உள்ளிட்டவற்றை அரசின் அனுமதியுடன் ஏற்பாடு செய்து தருமாறு அமைச்சரைச் சந்தித்த, ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் பேச்சு வார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷரப், அலிசப்ரி ரஹீம் ஆகியோரும் கலந்துகொண்டனர். சந்திப்பில் அமைப்பின் தலைவர் எம்.ஜி.எம் ஹிஸாம் உட்பட எம்,ஆர்,எம் பாரூக், எம்,ஓ,எப்,ஜெஸீம், எச், எம், அம்ஜாடீன் மற்றும் எம்,எப்,என்,எம்,உஸாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...