மருத்துவ பொருட்களின் சவால்கள்; இலங்கைக்கு WHO முழு ஒத்துழைப்பு

அமைச்சர் பீரிஸிடம் WHO பிரதிநிதி உறுதியளிப்பு

 

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங், (Dr.Alaka Singh) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதிப்படுத்தினார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை நேற்று முன்தினம் (25) வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போதே அவர்  இவ்வாறு தமது ஆதரவை உறுதிப்படுத்தினார். இக்கலந்துரையாடலின் போது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

இதன்போதே, தற்போதைய சுகாதாரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவை கலாநிதி. சிங் அமைச்சரிடம் உறுதிப்படுத்தினார். பல்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து வெளிப்படும் உதவிக்கான கோரிக்கைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் நாட்டின் அவசரத் தேவைகளை அடையாளம் காண அனுமதிக்கும் மத்திய பொறிமுறையை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இது, இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் இலக்கு உதவிகளை வழங்குவதில் பலதரப்பு நன்கொடை நிறுவனங்கள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு உதவும். மருத்துவ சவால்களை எதிர்கொள்வதற்கும், அரச மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் அதிகபட்ச பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் இந் நிபுணத்துவத்தையும் அவர் வரவேற்றார்.

எதிர்வரும் ஜூலை இறுதி வரையான காலம் முக்கியமான காலப்பகுதியாகுமென்றும், 2022 ஆகஸ்ட் முதல் ஜூலை 2023 வரை நாட்டில் போதுமான மருத்துவப் பொருட்கள் இருக்கும் என்றும் கலாநிதி. சிங் தெரிவித்தார். தற்போது பல நாடுகளில் இருந்து பல உதவிகள் பெறப்படுகின்றன. இந்த சூழலில், அவர்கள் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து நன்கொடைகள், குறிப்பாக தனியார் நன்கொடைகளுக்கான தளத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து, குறிப்பாக இலங்கையிலுள்ள நாட்டிற்கான அலுவலகம் மற்றும் தற்போதைய சுகாதாரம் சம்பந்தப்பட்ட சவால்களின் நிலையைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு பல வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள வலுவான, நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...