கொரோனா தணிந்ததும் மற்றொரு அச்சுறுத்தலாக குரங்கு அம்மை!

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று வேகமாக பரவுகின்றது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக முடங்கிய பொருளாதார நடவடிக்கைகள் தற்போது தான் மீண்டும் தொடங்கி உள்ளன. இந்நிலையில்தான் தற்போது குரங்கு அம்மை எனும் தொற்று ஐரோப்பா நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது இன்னொரு நோய் உலகம் முழுவதையும் அச்சுறுத்துகிறதா என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் தான் உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் அதிகமாக பரவுகிறது. இந்த நோய் ஆபிரிக்காவின் ​ெகாங்கோவில் 2019 இல் கண்டறியப்பட்டது. ஆபிரிக்க நாடுகளில் பரவிய இந்த நோய் கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும் என்பதால் குரங்கம்மை பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 12 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. எதிர்வரும் நாட்களில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் குரங்கு அம்மை நோய் பரவி உள்ளது.


Add new comment

Or log in with...