O/L பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி; வெற்றிகரமாக நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும்

- கல்வி அமைச்சர் கோரிக்கை 
- மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சையினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும், பரீட்சையினை எவ்வித தடையுமின்றி நடாத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து பொதுமக்களிடத்திலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2021 க.பொ.த. (சா/த) பரீட்சையின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

தனியார் மற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என 517,496 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதேபோன்று 3,844 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன் அப்பரீட்சை நிலையங்களை ஒருங்கிணைப்பு செய்வதற்காக வேண்டி 542 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சையானது மாணவர்களுக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது. இந்த பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சையினை வெற்றிகரமாக முகங்கொண்டு சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். மனித வள அபிவிருத்தியில் இறுதி இலக்கு சவால்களை வெற்றிக் கொள்வதேயாகும் என கல்வி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இம்முறை பரீட்சையினை நடாத்துவதற்கான பிரதான சவாலாக எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவதாக அமைச்சர் இதன் போது சுட்டிக் காட்டினார். அந்த சவாலினை முறையடிக்க வேண்டுமெனில் எம்மால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லல், பரீட்சை நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பரீட்சை நிலையங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி சமூகமளிக்க கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் இவற்றில் முக்கியமானவையாகும். இதற்காக கல்வி அமைச்சர் எனும் ரீதியில் தான் அனைத்து ஆளுநர்களையும் தொடர்பு கொண்டு அதனூடாக அதிகாரிகளை அறிவுறுத்தி பரீட்சை அனுமதிப்பத்திரம், பரீட்சை கடமை கடிதங்கள், அடையாள அட்டைகளை பயன்படுத்தி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு வேண்டு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்காக பிரதேச செயலாளர்களும், பொலிசாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மனிதாபிமான ரீதியில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து பொதுமக்களிடத்திலும் வேண்டுகோள் விடுப்பதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற கடுமையான யுத்தத்தின் போது கூட, எந்தவொரு பரீட்சைக்கும் இடையூறு ஏற்படும் சூழ்நிலையை நாம் அனுபவித்ததில்லை. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எவ்வித இடையூறுமின்றி மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். கல்வி அமைச்சரின் தலையீட்டினால் தற்போது புகையிரதம் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகள், தனியார் பேரூந்து சங்கம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொலிசார் மற்றும் கல்வித் துறையுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்கள் பரீட்சையினை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக ஜுன் 01ம் திகதி வரை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சைகளுக்கு
பொறுப்பான உத்தியோகத்தர்களும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு குறித்த ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கேட்டுக்கொண்டார்.

பரீட்சையினை வெற்றிகரமாக நடாத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும், பரீட்சை நிலையங்களுக்கு முன்கூட்டியே வந்து சேர வேண்டியது அவசியம். ஏனைய பரீட்சை நாட்களை போலல்லாது அதிகாலையிலேயே எழுந்து அவசரமாக தயாராகி பாதைகளுக்கு வந்து பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டிக் கொண்டார்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலைய பொறுப்பாளரிடம் அறிவித்து பரீட்சைக்கு தோற்றவும். மேலும், ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் முகத்தை மூடாது வழமையாக பாடசாலைக்கு சமூகமளிப்பதனை போன்று பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.

பரீட்சைகள்  ஆரம்பிக்கும் திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு வரும் எந்தவொரு விண்ணப்பதாரியையும் எவ்வித காரணத்திற்காகவும் திருப்பி அனுப்ப வேண்டாம் என பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை விதிகளின்படி, பரீட்சைக்கு தோற்றுவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அரை மணி நேரம் மட்டுமே அவர்களுக்கான சலுகை காலமாக கருதப்படும். எனினும் இம்முறை தற்போதைய சூழ்நிலையினை கவனத்திற் கொண்டு, தாமதமாக வருகின்ற பரீட்சார்த்திகளை திருப்பி அனுப்பாமல்  வினாத்தாள்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பரீட்சைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உள்ளடங்கிய றூயவளயுpp குழுவின் ஊடாக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி பரீட்சார்த்திகளுக்கு சலுகைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையினால் பாட விதானங்களை முழுமைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற் கொண்டு பரீட்சையின் தரத்தினை எவ்விதத்திலும் தளர்த்துவதற்கு முடியாது எனவும், சர்வதேசம் ஏற்றுக்கொண்ட இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களின் பெறுமதிக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் வினாப்பத்திரங்கள் தயார்ப்படுத்தப்படும் எனவும், பரீட்சார்த்திகள் பதிலளிக்கும் முறையினை பரிசீலித்து முடிவுகளை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு, பரீட்சைக்கு முகங்கொடுத்து சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்று  பிரார்த்தித்துக் கொண்ட கல்வி அமைச்சர், அதற்காக பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு பலமாக இருந்து ஆதரவு நல்குமாறும் குறித்த ஊடகக் கலந்துரையாடலின் இறுதியில் வேண்டிக் கொண்டார்.

குறித்த ஊடகக் கலந்துரையாடலின் காணொளி : https://www.vishmithacloud.com/s-IRAfCbON


Add new comment

Or log in with...