செவ்வாயில் கதவின் வாயில் வடிவில் துளை

செவ்வாய்க் கோளில் கதவு ஒன்று இருப்பதைப் போன்று காட்டும் படங்கள் அண்மையில் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் நாசா ஆய்வகத்துடைய கியுரியோசிட்டி விண்கலம் செவ்வாய்க் கோளில் எடுத்த சில படங்கள் வெளியிடப்பட்டன.

இம்மாதம் 7ஆம் திகதி எடுக்கப்பட்ட படத்தில் மௌன்ட் ஷார்ப் எனும் மலையிலுள்ள குன்று இடம்பெறுகிறது. குன்றில் ஒரு பெரும் துளை தென்படுகிறது.

30 சென்ட்டிமீற்றர் உயரத்திலும் 40 சென்ட்டிமீற்றர் அகலத்திலும் இருக்கும் அந்தத் துளை ஒரு கதவைப் போன்று தோன்றுகிறது. ஒரு நாய் அதற்குள் நுழைவதற்கான சரியான அளவில் அது உள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள் பலர் படம் போலியானதா என்றுகூட கேள்வி எழுப்பினர். இருப்பினும், படம் உண்மைதான் என்று நாசா ஆய்வகம் கூறியுள்ளது.

துளை இருந்தது உண்மை ஆனால் அது வேற்றுலக மனிதர்களின் பயன்பாட்டுக்கா என்பது தெரியவில்லை. அது போன்ற துளைகள் செவ்வாய்க் கோள், பூமி ஆகியவற்றின் மேற்பரப்பில் காணப்படலாம் என்று கூறப்பட்டது.

துளை இயற்கையாக உருவான ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...