அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக் கழகம் சம்பியன்

அக்கரைப்பற்று பவர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பவர் சம்பியன் கிண்ணம் – 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.

பவர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 11பேர் 8ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை (16) ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை எவர்டொப் மற்றும் அக்கரைப்பற்று சம்பியன் ஆகிய விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய எவர்டொப் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்கள் முடிவில் 06விக்கட்டுக்களை இழந்து 71ஓட்டங்களைப் பெற்றனர்.

72ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சம்பியன் கழக அணியினர் 8ஓவர்கள் முடிவில் 08விக்கட்டுக்களை இழந்து 45ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினைத் தழுவிக்கொண்டனர். இறுதிப்போட்டியின் போது தனது திறமைகளை வெளிப்படுத்தி எவர்டொப் கழக வெற்றிக்கு வழிவகுத்த என்.எம்.சியாம் இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும், இச்சுற்றுத்தொடரின் சிறந்த வீராக அக்கழகத்தின் இனாத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். பவர் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளருமான ரீ.கிறோஜாதரன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பவர் விளையாட்டுக் கழகத்தின் செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான ரீ.தனராஜன், சமூக செயற்பாட்டாளர் ரீ.பிரதீபன், பவர் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும், ஆலையடிவேம்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அதிகாரியுமான ரீ. குவிதாகரன், ஆலோசகர்களான எம்.தயாகரன் மற்றும் ரீ.ரதிகரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இறுதிப்போட்டியின் போது வெற்றிபெற்று முதலிடத்தினைப் பெற்றுக்கொண்ட எவர்டொப் கழக அணியினருக்கு வெற்றிக் கிண்ணமும் பணப் பரிசும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இரண்டாமிடத்தினை பெற்ற சம்பியன் விளையாட்டுக் கழக அணியினருக்கும் கிண்ணமும் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாரை மாவட்டத்திலுள்ள 32முன்னனிக் கழகங்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(பாலமுனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...