அரசியல் பேதங்களை புறந்தள்ளி விட்டு அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம்!

அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்துவதைப் பார்க்கிலும் பொருளாதார மீட்சிக்கான விடயங்களிலேயே இலங்கையின் அரசியல்வாதிகளும் சாதாரண பொதுமக்களும் இப்போது அதிக கரிசனை செலுத்த வேண்டியிருக்கின்றது. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியைப் பற்றிச் சிந்திக்கின்ற எவரும் இதனை ஒப்புக் கொள்வர்.

தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்ட எமது அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அரசியல் போட்டாபோட்டிகளில் அவர்கள் தொடர்ந்தும் காலத்தை விரயம் செய்து கொண்டிருப்பார்களானால், எதிர்காலத்தில் அரசியல் செய்வதற்கே நாடொன்று இல்லாமல் போகும் நிலைமை உருவாகக் கூடும்.

நாட்டின் பொருளாதார நிபுணர்கள் பலர் இதுபற்றிய எச்சரிக்கையை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். மத்திய வங்கியின் ஆளுநரும் கூட இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தான நிலைமையில் உள்ளதை சமீபத்தில் கவலையுடன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் எமது அரசியல்வாதிகளில் பலர் அந்த எச்சரிக்கை அறிவிப்பை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

அவர்களில் பலர் அரசியல் விவகாரங்களிலேயே இன்னும் தமது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் இனிமேலும் மோசமடையுமானால் நாம் அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து விடுவோமென்ற யதார்த்தத்தை அரசியல்வாதிகள் பலர் இன்னுமே புரிந்து கொள்ளவில்லை. அரசியல் மாத்திரமே அவர்களுக்குத் தேவையாக உள்ளது. எமது அரசியல்வாதிகள் இன்று மக்களுக்கு ஆற்ற வேண்டிய நன்மை ஒன்றேயொன்றுதான்.

அரசியல் மாயையில் இருந்து அவர்கள் முதலில் வெளியே வர வேண்டும். அரசியல் போட்டாபோட்டிகள், அதிகார மோகம் ஆகியவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பதையிட்டும், மக்களின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லையேல் பொருளாதார நெருக்கடியானது மேலும் மோசமடைவதற்கே இடமுண்டு. மக்களை நெருக்கடிக்குள் தள்ளி விட்ட குற்றத்துக்குரிய பாத்திரவாளிகளாக அவர்கள் கணிக்கப்படுவார்கள்.

நாட்டின் இன்றைய பொருளாதார நிலைமை குறித்தும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான எதிர்கால துரித திட்டங்கள் தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெளிவுபடுத்தியிருந்தார். புதிய பிரதமராகப் பதவியேற்ற இரண்டாவது நாளன்று ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதுபற்றி விளக்கமளித்திருந்தார். பிரதமரின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இருந்து அரசியல்வாதிகள் பலர் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

இலங்கை மக்கள் அனைவரும் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதாரப் பின்னடைவைப் பொறுத்தவரை எமது நாடு அதிக தூரத்துக்கு பின்னோக்கித் தள்ளப்பட்டு விட்டது. இன்றைய வீழ்ச்சியானது எமது நாட்டின் வரலாற்றில் முன்னொரு போதும் ஏற்படாததாகும். இந்த வீழ்ச்சிக்கு யார் காரணமென்று ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதனால் எதுவித பயனும் எமக்கு ஏற்படப் போவதில்லை. அது காலத்தை மேலும் வீணடிக்கும் செயலாகும்.

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு நாம் எம்மைத் திருத்திக் கொள்வதே இன்றைய நிலையில் சமயோசிதம் நிறைந்ததாகும். அது மாத்திரமன்றி பொருளாதாரத்தில் துரிதமாக முன்னேறுவதற்கான திட்டங்களை வகுத்து அவற்றைச் செயல்படுத்துவதே இன்றுள்ள தேவையாகும். இந்த விடயத்தில் இன்னும் அரசியல் பேதங்களை முன்வைத்து முரண்பட்டுக் கொண்டிருந்தால் துன்பங்களே மேலும் தொடர்வதற்கு இடமுண்டு.

பொருளாதார மீட்சியென்பது ஒரே இரவில் நடந்து விடுவதல்ல. பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை எமது நாடு முன்னெடுத்தாலம் கூட, இன்றைய நெருக்கடியானது மேலும் சில காலத்துக்கு தொடருமென்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். குறிப்பிட்ட சில காலப் பகுதிக்குப் பின்னரே நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறிச் செல்லுமென அவர்கள் கூறுகின்றனர். அதுவரை அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டியவர்களாக மக்கள் உள்ளனர். மக்களின் சகிப்புத் தன்மையிலும், அரசியல்வாதிகளின் புரிந்துணர்விலும்தான் நாட்டின் பொருளாதார மீட்சி தங்கியுள்ளது என்பதே உண்மை.

பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகுந்த ஆற்றலும், அனுபவமும் மிக்கவரெனப் போற்றப்படுகின்றார். அவர் சர்வதேச ரீதியில் நன்மதிப்பும் செல்வாக்கும் பெற்ற ஒரு அரசியல் தலைவராவார். அவர் பதவியேற்றதும் சர்வதேச நாடுகள் வெளியிட்டிருந்த அறிக்கைகள் இதற்குச் சான்றாகும். எனவே இன்றைய நெருக்கடியில் இருந்து மீள்வது பற்றி மாத்திரமே நாம் அனைவரும் தற்போது சிந்திக்க வேண்டும். அரசியல் வன்மமும், போட்டாபோட்டியும் இங்கே தொடருமானால் எமது அழகிய தேசம் மென்மேலும் சீரழிந்து போகுமென்ற யதார்த்தத்தை ஒவ்வொருவருமே புரிந்து கொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...