சுகாதார அவசர நிலைகளை எதிர்த்துப்போராட ஒருங்கிணைந்த பதிலளிப்பு மிகவும் அவசியம்

- உலகளாவிய கொவிட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

சுகாதார அவசரநிலைகளை எதிர்காலத்தில் எதிர்த்துப் போராடுவதற்கு ஒருங்கிணைந்த பதிலளிப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலக ஒழுங்கில்  மிகவும் நெகிழ்வான போக்கைக் கொண்டுள்ள உலக வர்த்தக அமைப்புடன் நெகிழ்வுத்தன்மை மிக்க உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

'பெருந்தொற்றைத் தவிர்த்தல் மற்றும் தயாராவதற்கு முன்னுரிமை அளித்தல்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கொவிட் 19 தொற்று தொடர்பான இரண்டாவது  உலகலாவிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தொடர்ந்தும் உரையாற்றுகையில், மீள்தன்மையுடைய உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மறுசீரமைக்கப்படுவது அவசியம். அத்தோடு விநியோகச் சங்கிலியை உறுதியான முறையிலும் கணிப்பிடக்கூடிய வகையிலும்  பேணவும் வேண்டும்.   தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் வழங்கும் செயன்முறையைச்  சீரமைக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. அதனால் உலகளாவிய சமூகத்தின் பொறுப்பு மிக்க அங்கத்தவர் என்ற வகையில் இம்முயற்சிகளில் முக்கிய பங்காற்ற இந்தியா தயாராக உள்ளது.

எதிர்கால சுகாதார அவசரநிலைகளை எதிர்த்து போராட ஒருங்கிணைந்த பதிலளிப்பின் தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. அதனால் நாம் நெகிழ்வுத்தன்மை கொண்ட உலகளாவிய விநியோகச் சங்கிலியை கட்டியெழுப்ப வேண்டும். தடுப்பூசிகளையும் மருந்து பொருட்களையும் நியாயமுறையில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் உருவாக்க வேண்டும். அதனால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மேலும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும். அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்தை சீரமைத்து பலப்படுத்துவதோடு உலகளாவிய சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். பெருந்தொற்றுக்கு எதிரான மூலோபாயமானது, மக்களை மையமாகக் கொண்டது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் சுகாதார பராமரிப்புக்காக எமது வருடாந்த வரவு செலவுத் திட்டடத்தில் இற்றைவரையும் இல்லாத அளவுக்கு நாம் அதிக நிதியொதுக்கீட்டை மேற்கொண்டுள்ளோம்.  எங்களது தடுப்பூசித்திட்டம் உலகிலேயே மிகவும் விசாலமானது. சுமார் 90 சதவீதமான வளர்ந்தவர்களுக்கும், 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் நாம் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொடுத்துள்ளோம்' என்றும் குறிப்பிட்டார் என 'த பிரிண்ட்' தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...