லிபிய பாராளுமன்றம் நியமித்த பிரதமர் பாதி பஷாகா போட்டி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் திரிபோலிக்குள் நுழைந்ததால் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் மோதல் வெடித்தது. இதனை அடுத்து அவர் தலைநகரில் இருந்து வெளியேறியுள்ளார்.
நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் ஆரம்பித்த கடும் துப்பாக்கிச் சண்டை காலை 7 மணி வரை நீடித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லிபியாவில் பிரதமராக அப்துஹமித் டிபைபா ஆட்சியில் இருப்பதோடு, அவருக்கு போட்டியாக பிரதமர் பாதி பஷாகா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு நகரான தப்ரூக்கில் இயங்கும் பாராளுமன்றமே அவரை நியமித்தது.
இந்நிலையில் பாதி பஷாகா பல அமைச்சர்களையும் சேர்த்துக்கொண்டு தலைநகர் திரிபோலிக்கு பணியை ஆரம்பிக்க வந்துள்ளார். லிபியாவில் 2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு மக்கள் எழுச்சி மூலம் அந்நாட்டு தலைவர் முஅம்மர் கடாபி பதவி கவிழ்க்கப்பட்ட பின் அங்கு பெரும் பாதுகாப்பு பிரச்சினை இருந்து வருகிறது. 2014 தொடக்கம் அங்கு இரு போட்டி அரசுகள் இயங்கி வருகின்றன.
Add new comment