கியூபா மீதான தடைகளை தளர்த்த அமெரிக்கா முடிவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட கடும் தடைகளை தளர்த்தும் திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பைடன் நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் புதிய நடவடிக்கையின் கீழ், கியூபாவில் இருக்கும் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது மற்றும் அந்த நாட்டுக்கு பயணிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

இதில் கியூபர்களுக்கான அமெரிக்க விசா நடைமுறை விரைவுபடுத்தப்படும்.

இந்த நடவடிக்கை கியூப பிரஜைகள் அரச ஒடுக்குமுறையில் இருந்து விடுபட்டு வாழ்வைத் தொடர அனுமதிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குடியேறிகளுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 1,000 டொலர்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புதிய திட்டத்தின் கீழ் குடும்பம் அல்லாத அங்கத்தவர்களுக்கு நன்கொடையாக பணம் அனுப்புவதற்கும் அனுமதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் கியூபாவுடனான பதற்றம் தணிக்கப்பட்டபோதும், 2017 இல் டிரம்ப் நிர்வாகம் கியூப அரசுக்கு எதிராக பரந்த அளவில் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...