முள்ளிவாய்க்காலில் அனர்த்தம் ஏற்படுமென்ற அச்சத்தை முன்பே நான் உணர்ந்திருந்தேன்

முள்ளிவாய்க்காலில் பெரும் அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சத்தை முன்பே உணர்ந்த நான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு பலதடைவை எச்சரித்திருந்தேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள முடியாதமை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

ஆனந்தசங்கரியின் அறிக்ைகயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். எங்கிருந்தாலும் எனது உணர்வுபூர்வமான பங்களிப்பு எப்போதும் உண்டு. 

அன்று முள்ளிவாய்க்காலில் பெரும் அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சத்தை முன்பே உணர்ந்த நான், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பல தடைவை எச்சரித்திருந்தேன். அவற்றில் முக்கியமான சிலவற்றில் இருந்து ஒவ்வொரு பந்தியை மட்டும் இங்கே தந்துள்ளேன். நான் உண்மைகளை மறைப்பவன் அல்லன். தெரிந்த உண்மைகளை தயங்காமல் வெளியிடுபவன். இறுதிக் கட்டத்தில் புலிகளின் தொலைபேசி அழைப்பைக் கூட ஏற்க மறுத்து அவர்களையும் மக்களையும் நட்டாற்றில் தவிக்க விட்டமை மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும். 

மேற்குறிப்பிட்ட கடிதத்தின் பகுதிகள் கீழ்வருமாறு. 

1. 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும். இன்றேல் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களை வேண்டுகிறது என்ற தலைப்புடன் 11.01.2009அன்று விடுத்த எனது அறிக்கையை படித்தது ஞாபகமில்லையா? நீங்கள் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்க எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காது காப்பாற்றியிருக்கலாம். 

2. 'எமது மக்களைக் காப்பாற்ற கடைசி சந்தரப்பம்' என்ற தலைப்பில் 16.03.2009அன்று பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் 87000குடும்பங்களைச் சேர்ந்த 330, 000மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாமென எழுதியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து பதிலெதுவும் கிடைக்கவில்லை. 

அது ஓர் ஆயுதம் தாங்கிய இயக்கம் ஆகையாலும், அதன் உறுப்பினர்கள் பல்வேறு விதமாக இணைக்கப்பட்டமையாலும் அவர்கள் குறிப்பிட்ட சில நியதிகளுக்குட்பட்டு செயற்படுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நான் அவர்களை குறை கூறவில்லை. ஆனால் நீங்கள் ஒரு தடவை முயற்சித்துப் பார்த்திருக்கலாம். 

3. 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முன்னைய ஜனாதிபதியின் செயலாளர் அரசியல் கட்சித் தலைவர்களை நாட்டின் தற்போதைய நிலைபற்றி ஆராயவென 26ஆம் திகதி சந்திப்பு என அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் மிகப் பாரதூரமான விடயம் யாதெனில் யுத்தமும் தடுத்து வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கூட்டத்தை பகிஷ்கரித்தது. நீங்கள் அன்று சமூகம் கொடுத்திருந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு இந்த மக்களை அழைத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் வேண்டியிருக்கலாம். 

ஒருவிதமான பதவியுமில்லாமல் கூட்டணித் தலைவர் என்ற அந்தஸ்தை வைத்து இன்னும் வன்னியில் 85000மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி கூற நான் அதனை மறுத்துரைத்து 3இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியதும் ஜனாதிபதி கோபமாக உரத்துப் பேச என்னுடைய நிலைப்பாடு சரியென வற்புறுத்திக் கூறினேன். 

4. ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. சிவசங்கர் மேனன் உங்களை உடனடியாக டெல்லி வருமாறு அழைத்த போது வேறு 9தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் மாவை. சேனாதிராசா சந்தித்துப் பேசி யுத்தநிறுத்தம் செய்யாமல் இந்தியாவுக்குப் போக மாட்டோம் என தீர்மானித்து டெல்லிக்கும் தெரிவித்திருந்தனர். 

ஏப்ரல் 11இல் நான் எனது பத்திரிகை அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பை நிராகரிப்பது என எடுத்த தீர்வு முட்டாள் தனமானது மட்டுமல்ல எமது தேவைக்கு மிகவும் முரண்பட்டதாகும் எனத் தலையங்கமிட்டு அனுப்பியிருந்தேன். 

நீங்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்றிருந்தால் அல்லது நீங்களேனும் சென்றிருந்தால் அடித்துக் கூறுவேன் இந்திய அரசாங்கம் எமது மக்களைக் காப்பாற்ற ஒரு உறுதியான நடவடிக்கையை எடுத்திருக்கும். இப்படிச் செய்து விட்டு இப்போது நீங்கள் யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்? 

5. மே 2ஆம் திகதி இலங்கை ஜனாதிபதிக்கு பல்வேறு ஆலோசனைகளுடன் “உடனடியாக அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அது ஒரு பெரும் அனர்த்தத்தில் முடியும்" என குறிப்பிட்டிருந்தேன். 

மேலும் அந்தக் கடிதத்தில் “அரசுக்கு ஏற்புடையதான ஒரு சர்வதேச அமைப்பை தெரிவு செய்து வன்னிக்கு அனுப்பி புலிகளுடன் ஆலோசித்து இந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஏதுவாக ஆயுதங்களைக் கையளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கும்படி வேண்டியதுடன் அதற்கு 2வார அவகாசமும் கொடுக்கலாம் என வேண்டியிருந்தேன். 

ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கூட்டத்திற்குப் போவதற்கு உங்களுக்கு என்ன தடை இருந்தது? கலந்து கொண்டிருந்தால் சில நிபந்தனைகளுக்கு அமைய அவர்களுக்கு வசதி செய்யும்படி வற்புறுத்தியிருக்கலாம். 

6. நாடு ஒரு பெரிய அனர்த்தத்தை எதிர்நோக்கி இருப்பது தெரிந்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் பிரித்தானிய நாடாளுமன்ற குழு வருகை தந்த போது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் ஆகையால் அதை தடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தீர்கள், இதன் அர்த்தம் யாதெனில் நீங்களும் உங்கள் குழுவினரும் இந்தியத் தேர்தல் முடிந்ததும் ஒரு பாரிய அனர்த்தம் நடைபெறும் என அறிந்து வைத்திருந்தீர்கள், உங்கள் குழுவில் குறைந்தது 12உறுப்பினர்களை வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு அனுப்பி விட்டு இப்படியான ஒரு உரையை ஆற்றுவதற்கு வெட்கம் இல்லையா? 

நான் தற்போது உங்களைக் கேட்க விரும்புவது யாதெனில் உங்கள் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா?

இவ்வாறு ஆனந்தசங்கரி தனது அறிக்ைகயில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...