தி.மு.க அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்!

தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசுக்கு அடுத்த நெருக்கடியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி உருவெடுத்து நிற்கிறது. சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பது தி.மு.க கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவைகளின் வலியுறுத்தலாக உள்ளது.

திராவிட ​ெமாடல், தந்தை பெரியார் பூமி, பெரியாரின் அரசு என்று பேசும் தி.மு.க அரசு, சில விஷயங்களில் மென்மைத்தன்மையைக் கடைப்பிடிக்கிறது அல்லது நேர் எதிர் நிலைப்பாட்டை எடுக்கிறது என்கிறது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கோவை கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் சகாக்களுக்கு அனுமதி தொடங்கி இந்த சர்ச்சை நீடிக்கிறது.

அண்மையில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் சுமக்கும் நிகழ்ச்சிக்கு முதலில் தி.மு.க அரசு தடை விதித்தது. இதன் பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் பல்லக்கில் சுமக்கும் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதித்தது.

இதேபோல் ரூபா 25 கோடியில் பசுமடம் அமைக்கும் விவகாரமும் சர்ச்சையானது. பின்னர் வட இந்தியாவைப் போல மாட்டிறைச்சி விவகாரம் பேசுபொருளானது.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டமை தி.மு.க அரசு மீது கடும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக ஆம்பூர் பிரியாணி திருவிழாவே ரத்தாகிப் போனது. இதனால் தி.மு.க அரசு சற்றே பெருமூச்சு விட்டது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியானது தி.மு.க அரசுக்கு நெருக்கடியாகி உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுக்கப் பரவி வாழ்கின்ற தமிழர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து, சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மேற்படி நாளை நினைவுகூர்வதற்கும் எவ்விதத் தடையும் விதிக்கக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, "முள்ளிவாய்க்கால் தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்துதலை மே17 இயக்கம் மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ளது. இதற்கு உடனே அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் தமிழக அரசுக்கு நெருக்கடியாகி உள்ளது.


Add new comment

Or log in with...