இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை

முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். இராஜாராம்

ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து ஆட்சி நடத்தியதை இன்று இளைஞர்கள் மாத்திரமல்ல அனைத்து மக்களும் புரிந்துக்கொண்டுள்ளார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார். 

ஊடக அறிக்கை மூலமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,.. 

கோல்பேஸ் பேரெளிச்சி போராட்டத்திற்கு மலையக இளைஞர், யுவதிகளும் ஆதரவு வழங்க வேண்டும்.   

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த பின்னர் தற்பொழுது புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுள்ளார். இளைஞர் யுவதிகள் நடத்திய போராட்டத்தால் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் விலகியுள்ளார்.

இன்னும் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவில்லை. ஜனாதிபதி விலகும் வரை தொடர்ந்து நடத்தும் இந்த போராட்டத்திற்கு இன, மத, கட்சி பேதமில்லாமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

இனவாதம் மற்றும் மதவாதத்தையும் பேசி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சி பீடம் வந்தவர்களுக்கு நல்ல பாடத்தினை இளைஞர், யுவதிகள் புகட்டியுள்ளனர். நாட்டில் பட்டினி பஞ்சம் நீங்கி திருட்டை ஒழித்து சமத்துவம் ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு நல்லாட்சியை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இன்று இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளார்கள். விதைக்கப்பட்ட விதையும் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளும் சும்மா இருக்காது.

தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை இந்த அரசாங்கத்தால் பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர் இன்றும் உரிமையற்றவர்களாக உள்ளார்கள். இவர்களுக்கு எந்தவித உதவிகளும் செய்யாத கையாலாகாத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை நாமும் போராடுவோம் என்றார்.

தலவாக்கலை குறூப் நிருபர் 

  


Add new comment

Or log in with...