தமிழர் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பொறுப்பு

ஞாபகமூட்டுகிறார் TNA தலைவர் சம்பந்தன் 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் இந்தியாவுக்குள்ள பொறுப்பு உரியவாறு நிறைவேற்றப்படவேண்டுமென தமிழ்  தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

ஸ்தம்பிதமான நிலையிலிருக்கும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து, இந்தியா கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், இவ்விடயத்தில் இந்தியாவுக்குள்ள பொறுப்பை உரியவாறு நிறைவேற்றவேண்டியது அவசியமென்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடுமென்றும் அவர்,சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.  

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். 

இந்திய உயர்ஸ்தானிகருடன் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பிதமான நிலையிலிருப்பதாக அவரிடம் சுட்டிக்காட்டியதாகவும், இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியமென்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி, தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலையொன்று நிலவுகின்ற பின்னணியில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்தவேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். 

அதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், இப்போது நாட்டில் இடம்பெற்றுவரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். 

இச்சந்திப்பின்போது, புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஏதேனும் பிரஸ்தாபித்தாரா? என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, 'இல்லை' என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாட்டை உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்தியதாகவும் அவர் கூறினார். 


Add new comment

Or log in with...