ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 31 வருடங்களின் பின் விடுதலையான பேரறிவாளன்

- தீர்ப்பில் 8 முக்கிய விடயங்களை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று (18) தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு இன்று புதன்கிழமை காலை 10.45 மணியளவில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினர்.

அ.ஞா. பேரறிவாளன்  திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையைச் சேர்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தமீழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தற்கொலை குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு மின்கலன்களை வாங்கிக் கொடுத்ததற்காக இவர் 1991 ஜூன் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தூக்குத்தண்டனை 2011 செப்டம்பர் 09 இல் நிறைவேற்றப்படவிருந்த நிலையில்  பின்போடப்பட்டது. தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட்டு தீர்ப்பு 2014 பெப்ரவரி 18 ஆம் திகதி வழங்கப்பட்டது.

முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் 'உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறு. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப விருப்பமில்லை.

161-ஆவது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால்,அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாகக் கூறி தீர்ப்பு வழங்கினர்.

31 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வரலாற்று தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

 • ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
 • அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.
 • 161-வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.
 • முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.
 • உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.
 • இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
 • பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
 • பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை:

 • 1991 மே 21 : சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை
 • 1991 ஜூன் 11: பேரறிவாளன் கைது
 • 1998 ஜன 28 : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்
 • 1999 மே 11 : சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மீதமுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
 • 1999 ஒக்டோபர் 8: மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
 • 1999 ஒக்டோபர் 17: தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்
 • 1999 ஒக்டோபர் 29 : தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நான்கு பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.
 • 2000 ஏப்ரல் 25 : பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.
 • 2000 ஏப்ரல் 26: குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்
 • 2011 ஓகஸ்ட் 26: பேரறிவாளனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
 • 2016: கருணை மனுவை குடியரசு தலைவர் தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பதிவு செய்த நிலையில் தன்னை விடுவிக்கக்கோரி 2016 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
 • 2022 மே 18 : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Add new comment

Or log in with...