இலங்கை வந்தடைந்த தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்கள்

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பயிற்றுவிப்பாளர் அண்ட்ரூ மொர்ரிஸன் மற்றும் கெய்த் ஸ்டீவன்ஸ் ஆகியோர் தேசிய அணியுடனான கடமைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் நேற்று (15) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை கால்பந்து சம்மேளனம், இலங்கை ஆடவர் கால்பந்து அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அண்ட்ரூ மொர்ரிஸனையும், உதவிப் பயிற்றுவிப்பாளராக கெய்த் ஸ்டீவன்ஸினையும் நியமனம் செய்த தகவலை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இலங்கை அணி ஏஎப்சி கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தயார்படுத்தப்படவுள்ள நிலையில், குறித்த புதிய பயிற்றுவிப்பாளர்கள் விரைவில் தேசிய அணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் இலங்கை கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது.

பயிற்றுவிப்பாளர்கள் இருவரும் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இருவரையும் இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் ஹிரான் ரத்னாயக்க மற்றும் இலங்கை கால்பந்து சம்மேனத்தின் போட்டித் தொடர்களுக்கான பொறுப்பாளர் ஆசிப் அன்சார் ஆகியோர் பண்டாரனாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. புதிய பயிற்றுவிப்பாளர்கள் இருவரும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமருடன் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...