பின்லாந்துக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை

பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோவை தொலைபேசியில் அழைத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்த நாடு தனது நடுநிலை அந்தஸ்தை கைவிட்டு நேட்டோவில் இணைவது தவறு என்று எச்சரித்துள்ளார்.

பின்லாந்தின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை என்பதையும் புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான கோரிக்கையை விரைவில் விடுக்கவுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே புட்டினின் இந்த தொலைபேசி அழைப்பு இடம்பெற்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து சுவீடனும் நேட்டோவில் இணைய விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவுடன் 1300 கி.மீ எல்லையை பகிர்ந்துகொள்ளும் பின்லாந்து, அந்த நாட்டுடனான முறுகலை தவிர்ப்பதற்காக நேட்டோவில் இணைவதை தவிர்த்து வந்தது.

பின்லாந்தின் இந்த முடிவுக்கு எதிரான பதில் நடவடிக்கை பற்றி புட்டின் குறிப்பிட்டு கூறாதபோதும், ரஷ்யா வெளியுறவு அமைச்சர் இதற்கு எதிரான பதிலடி பற்றி எச்சரித்துள்ளார்.

பின்லாந்துக்கு மின்சாரம் வழங்குவதை ரஷ்யா நிறுத்தி இருப்பது இதற்கான ஆரம்ப சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...