இலங்கை-பங்களாதேஷ் முதல் டெஸ்ட்
சிட்டங்கொங்கில் நேற்று ஆரம்பமான இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடிப்பெடுத்தாடத் தீர்மானித்தார். ஆரம்ப ஜோடியாக திமுத் கருணாரத்னவுடன் ஓஷட பெர்னாண்டொ களமிறங்கினார். வலுவான ஆரம்பத்தை பெறுவதற்கு முன்னரே இலங்கை முதல் விக்கெட்டுக்காக தலைவர் திமுத் கருணாரத்ன 09 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
ஓஷட பெர்னாண்டோவுடன் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் நிதானமாக ஆடிய நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 66ஆக இருந்த நிலையில் இரண்டாவது விக்கெட்டாக ஓஷட பெர்ணான்டோ 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், மெண்டிசுடன் இணைந்து இலங்கை அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றார். மூன்றாம் விக்கெட் இணைப்போட்டமாக இந்த ஜோடி 92 ஓட்டங்களைக் குவித்தது. அரைச்சதத்தைக் கடந்த மெண்டிஸ் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த சகலதுறை வீரர் தனஞ்ஜய டி. சில்வா வந்த வேகத்திலேயே 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின் சிரேஷ்ட வீரர் தினேஸ் சந்திமால் மெத்தியூசுடன் இணைந்து முதல் நாள் முடியும் வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் சிறப்பாக ஆடி 5வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காத 75 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்றனர்.
பொறுப்புடன் ஆடிய அஞ்சலோ மெத்தியூஸ் முதல் நாள் முடிவில் மெத்தியூஸ் சதம்கடந்து 114 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களுடன் களத்திலிருந்தனர். இது மெத்தியூசின் 10வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் பந்து வீச்சில் நயிம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் தாஜுல் இஸ்லாம், சக்கீப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.
Add new comment