சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்துடன் இ.தொ.கா தலைவர் ஜீவன் பேச்சுவார்த்தை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் இடையேயான முக்கிய கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் தொழில்துறைகளின் பாதிப்பு தொடர்பாக அச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஷோயா யோஷிடா தலைமையில் நிகழ்நிலை வாயிலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையக அதிகாரிகள், ஆசிய பசுபிக் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இ.தொ.கா உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான் "வரலாற்று ரீதியில் இன, மத, மொழி பாகுபாட்டின் காரணமாக நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவை எதிர்நோக்கி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

சில சர்வதேச ஊடகங்கள் இப்போராட்டமானது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையிலான போராட்டமாக சித்திரிக்கின்றன. இது முழுமையாக உண்மைக்குப் புறம்பானதாகும். என்றுமில்லாதவாறு அத்தியாவசியப் பொருட்களின் உயர்வு, மின்வெட்டு மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவை கிடைக்காமை மக்களை சிரமத்தின் உச்சத்துக்கு கொண்டு சேர்த்து உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சங்கங்களும் கடந்த மாதம் 28 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 06ஆம் திகதி நடத்திய ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் இ.தொ.கா பங்குபற்றியது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காபந்து அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ஒரு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாக தனது முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்த்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின்படி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் தனது ஆதரவையும் வழங்க உள்ளதாகவும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்திடம் ஜீவன் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் "சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச ரீதியில் உதவக் கூடிய நிதி நிறுவனங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வழிகாட்டுதலின்படி நாம் ஆலோசனைகளை வழங்க முடியும்.

எமது சம்மேளனம் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணக்கத்துடன் செயற்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...