பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள்

- தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில் இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விளக்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சம்பந்தமாக உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மருந்துகள், உணவு மற்றும் பசளைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து அந்த அமைப்புகளுடனான கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது. சர்வதேச நிதி நிறுவனங்களுடனான சந்திப்பிற்கு சமாந்தரமாக சர்வதேச கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது சம்பந்தமாக வெளிநாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள் சாதகமானதாக உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர் எதிர்வரும் வாரத்திற்கு தேவையான எரிபொருளுக்கான  நிதியைப் பெற்றுக்கொள்ளும் உடனடி சவால் அரசு க்கு உள்ளதாகவும் தெரிவித்தார். வங்கிகளில் டொலர் பற்றாக்குறை நிலவுவதால்,  நிதியை திரட்டக்கூடிய வேறு மாற்றுவழிகள் குறித்து அரசு ஆராய்கிறது.

இதற்கு இடையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அதன் பின்னர் அது அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சந்திப்புக்களை அடுத்து நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி சம்பந்தமாக இன்று (16) மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...