பாராளுமன்ற வீதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

- 'கோத்தா கோ கம' போராட்டக்கார்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றிற்கு

பாராளுமன்ற நுழைவு வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, தியத்தஉயனவுக்கு முன்பாக உள்ள குறித்த வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் குறித்த வீதியை மறித்து பொலிஸார் நிறுவியிருந்த வீதித்தடையை, ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்ற முற்பட்ட வேளையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பொலிஸாரினால் இவ்வாறு நீரத்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு செல்லும் குறித்த வீதியை ஆக்கிரமித்து "ஹொரு கோ கம" என பெயரிட்டு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள், அரசாங்கத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 'கோட்டா கோ கம' என பெயரிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டக்களத்தில், ஜனாதிபதி செயலக வாயிலின் தடைகளை அகற்றுதல் மற்றும் ஒரு சில நபர்களுக்கு எதிரான தடையுத்தரவை பெறுவது தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதிலிருந்து கொழும்பு பிரதான நீதவான் விலகியுள்ளதோடு, குறித்த கோரிக்கையை எதிர்வரும் மே 10ஆம் திகதி, பிரதான நீதவான் முன்னிலையில் முன்வைக்குமாறு பொலிஸாருக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.


Add new comment

Or log in with...