1,000 இற்கும் அதிக தொழிற்சங்கங்கள் போராட்டம்

- புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்
- கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பாரிய பேரணி

இன்றையதினம் (28) நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து, சுகாதாரம், மின்சாரம், தபால், தோட்டத்துறை, வங்கிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 1,000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிற்சங்கப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விருப்பத்திற்கு தலைவணங்கு; அரசாங்கமே வீட்டிற்கு செல், எனும் எண்ணக்கருவின் கீழ் குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், முதலீட்டு வர்த்தக வலய ஊழியர்களும் இவ்வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்க ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக, புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

ஆயினும், இ.போ.ச. மற்றும் ஒரு சில தனியார் பஸ் சேவைகள் இன்றையதினம் சேவையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது.

தாங்கள் விரும்பினால் சேவையிலிருந்து விலக முடியுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் 7 நாட்களுக்குள் பதவி விலகாவிட்டால் வரும் நாட்களில் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Add new comment

Or log in with...