- பாரிய கூட்டங்கள் காரணமாக தீர்மானத்தில் மாற்றம்
முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்பது தொடர்பான அதன் முந்தைய முடிவை சுகாதார அமைச்சு மீண்டும் மாற்றியுள்ளது.
அதற்கமைய இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளி இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவினால் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல எனும் தீர்மானம் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 18ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல எனும் கட்டுப்பாடு உள்ளிட்ட மேலும் இரு சுகாதார வழிகாட்டல்களை தளர்த்தும் அறிவிப்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டிருந்தன.
பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக ஒன்றுகூடல் செயல்பாடுகளின் போது முகக்கவசம் அணிவது தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த அறிவிப்பை மாற்றியமைத்து சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இன்று புதிய அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பாரிய பொதுக் கூட்டங்களை கருத்தில் கொண்டு வெளி இடங்களிலும் முகக்கவசம் அணிவது முன்னர் போன்று கட்டாயமாகும் என, அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment