இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட்

இலங்கை கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் ஆடவர் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான, கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் இதனை அறிவித்துள்ள,

கிறிஸ் சில்வர்வூட், ஒக்டோபர் 2019 இல் இங்கிலாந்தின் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பு இங்கிலாந்து ஆடவர் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த அவர், 2019 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வென்றபோது அப்போதைய தலைமை பயிற்சியாளரான ட்ரெவர் பெய்லிஸின் (Trevor Bayliss) கீழ் பணிபுரிந்தார்.

சில்வர்வூட் இங்கிலாந்துக்காக 6 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதுடன், Yorkshire மற்றும் Middlesex அணிகளுக்காக கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார்.

அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். சிம்பாப்வேயில் Mashonaland Eagles அணியின் பயிற்சியாளராக அவர் முதன் முதலில் பயிற்சியாளர் பயணத்தை ஆரம்பித்திருந்தார். பின்னர் Essex கவுண்டி கிரிக்கெட்டின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர், பயிற்சியாளராக கடமையேற்று முதலாவது Logan Cup (கிண்ணத்தை) வெல்வதற்கு வழியமைத்தார்.

அவரது நியமனம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவிக்கையில், “தேசிய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கிறிஸை நியமிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர் என்பதுடன், அவரை இணைத்துக் கொள்ளும் செயல்முறையில் அவருடன் நாங்கள் நடத்திய கலந்துரையாடலுக்கமைய, அவரிடம் அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான தகுதிகள் இருப்பதாகத் தெரிந்து கொண்டோம்,'' என்றார்.

குறித்த நியமனம்  தொடர்பில் கிறிஸ் சில்வர்வூட் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

"இலங்கையுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்துன் கொழும்புக்குச் சென்று இப்பணியை ஆரம்பிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். இலங்கை மிகத் திறமையான மற்றும் ஆர்வமுள்ள வீரர்களைக் கொண்டுள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கூடிய விரைவில் சந்திப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்."


Add new comment

Or log in with...