அவசரகால பிரகடனம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

- சட்டத்தரணிகள் சங்க மனுக்களை விசாரிக்க முடிவு

அவசரகாலநிலை பிரகடனம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து, உணவு ஆகியவற்றை தட்டுப்பாடின்றி விநியோகிக்க உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அவசரகாலநிலை பிரகடனம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள வருமாறு,

அவசரகாலநிலை பிரகடனம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழுவின் அறிக்கை
ஏப்ரல் 2022 அன்று இரவு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலநிலை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது ஆழ்ந்த கரிசனங்களை வெளிப்படுத்துகின்றது. அவசரகால நிலை பிரகடனத்தின் மூலமாக, ஜனாதிபதியானவர், அரசியலமைப்பின் ஏற்பாடுகளினை தவிர, வேறு எந்தவொரு சட்ட ஏற்பாட்டினையும் மீறவும் திருத்தவும் அல்லது நீக்கவுமான அவசரகால ஒழுங்குவிதிகளை மேற்கொள்ளவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பிரவகிக்கும் பொதுமக்களது போராட்டங்கள் உட்பட, நாட்டின் தற்போதைய நிலையிற்கு அவசரகால நிலை பிரகடனம் தீர்வல்ல என்பது இ.ச.ச.தின் பார்வையாகவுள்ளது. இப்போராட்டங்கள் வாழ்வாதாரத்திற்கு மிக அத்தியாவசியமான சிலவற்றை கொண்டு தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் மக்களது அழுத்தமிக்க சூழ்நிலைகளையே பிரதிபலிக்கின்றன. கடந்த பல மாதங்களாகவே நாடு பாரிய பொருளாதார சிக்கல்கள்களை நோக்கி நகர்ந்து வந்ததுள்ளதுடன் உள்ளுர் மற்றும் வெளிநாடு என இருதரப்பு தொழிற்துறை வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களினால் விடுக்கப்பட்ட ஆரம்பகால எச்சரிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படாமலே போய்விட்டன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கூட நிகழவிருக்கும் பிரச்சினைகளது பின்விளைவுகளை குறிப்பிட்டு 14 ஜனவரி 2022 அன்று தற்போதைய பொருளாதார நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

துரதிர்ஷ்ட வசமாக, அதிகாரத்திலுள்ளவர்கள் இச்சூழ்நிலைகளது தீவிரத்தினையும் பொதுமக்களதும் சமூகத்தினரதும் வாழ்வில் அது ஏற்படுத்தக்கூடிய பாரிய விளைவுகள் குறித்தும் வெகுசமீப காலம் வரையில் புரிந்துக்கொள்ள தவறிவிட்டனர். அறை நாளிற்கும் மேலாக தொடரும் எதிர்பாரா மின்வெட்டுக்கள், எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு தட்டுப்பாடு, மருந்துப் பொருள் தட்டுப்பாடு, அந்நிய செலாவணி பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்களின் உயரும் விலைவாசி என அனைத்தும் இந்நாட்டு மக்களை ஒருவித அழுத்தத்திற்குள் ஆழ்த்திவிட்டன. இந்நாட்டு மக்களது அபிலாசைகளை புரிந்துகொள்வதிலும் அவர்களது கஷ்டநிலைகள் குறித்து அனுதாபங்கொள்வதிலும் தோல்வியே ஏற்பட்டுள்ளது. இம்மக்களது துன்பங்களை போக்கும் விதமாக இலங்கை அரசாங்கமானது பொருளாதார மீட்சிக்கான தனது கொள்கைகளையும் திட்டங்களையும் அதன் மக்களிற்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.

கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உள்ளடங்கலாக, போராடுவதும் அபிப்பிராய பேதங்களை வெளியிடுவதும் மக்களது அடிப்படை உரிமையாகும் என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்க்கமான பார்வையாக உள்ளது. இவ்வுரிமைகள், பொது ஒழுங்கின் பெயரில் அரசிலமைப்பின் 15 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டவற்றின் பிரகாரம் மட்டுப்பாடுகளிற்கு உட்படக்கூடியதே. ஆயினும், சட்டத்தினால் விதிக்கப்பட்ட எந்தவொரு மட்டுப்பாடும் நியாயமானதாகவும் ஏற்புடையதாகவும் காணப்படவேண்டும்.

ஒரு அமைதியான போராட்டம் வன்முறைமிக்கதாக மாறுகிறது என்றால், அது அபிப்பிராய பேதங்களை அமைதியாக வெளிப்படுத்துவதன் நோக்கங்களை நீர்த்துப்போகச் செய்யும் என்பதுடன் சட்டப்பூர்வ அடக்குமுறையை எதிர்நோக்கியருப்பவர்களது கரங்களையுமே பலப்படுத்தும். போராட்டத்தின் பொழுது இடம்பெற்ற அத்தகைய வன்முறை சம்பவங்களும் பொதுமக்களினாலோ அல்லது தனிநபர்களாளோ மேற்கொள்ளப்பட்ட சொத்துக்களிற்கான சேதங்களும் மன்னிக்கப்படக்கூடியது அல்ல என்பதுடன் கண்டிக்கப்படவேண்டியதுமாகும். அதைப்போலே, போராட்டங்களில் பங்கேற்பவர்களும் அத்தகைய போராட்டம் அமைதியான முறையில் நடப்பதனை உறுதிப்படுத்த அதி உச்ச கவனத்தை கொண்டிருப்பதுடன் அத்தகைய போராட்டத்தில் வன்முறையையோ அல்லது நாசகார வேலைகளையோ மேற்கொள்ள முயற்சிக்கும் நபர்கள் குறித்து மிக்க அவதானத்துடனும் காணப்பட வேண்டும்.

பொலிஸ் உட்பட அதிகாரிகள் சட்டபூர்வமற்ற ஒன்றுகூடல் தொடர்பில் செயற்படுவதற்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கும் உரிமையுடையவர்களாயினும், தங்களது அரசியலமைப்பின் கீழான உரிமையை பயன்படுத்தி அமைதியான முறையில் போராடுபவர்களிற்கும் வன்முறையில் ஈடுபடுபவர்களிற்கும் இடையில் வேறுபாடு காணப்படவும் வேண்டும். அவசரகால நிலையானது அமைதியான முறையில் போரடுபவர்களையும் அபிப்பிராய பேதங்களை வெளியிடுபவர்களையும் திணறடிக்கச் செய்வதற்கோ அல்லது தன்னிச்சையான கைதுகளையும் தடுத்துவைத்தல்களையும் மேற்கொள்வதற்காகவோ பயன்படுத்தப்படலாகாது.

17.02.2021 அன்று தீர்ப்ப ளிக்கப்பட்ட SCER 556/2008 மற்றும் 557/2008 யு.என்.எஸ்.பி. குருகுலசூரிய, கோருநர், சுயாதீன ஊடக அமைப்பு மற்றும் ஜே.கே.டபிள்யு. ஜயசேகர எதிர் இலங்கை ரூபவாஹின கூட்டுத்தாபனம் எனும் சமீபத்திய வழக்கில், உச்சநீதிமன்றமானது இலங்கை நீதிமன்றங்களின் பல தீர்ப்புக்களில் காணப்பட்ட பின்வரும் பந்தியை மேற்கோளிட்டு அனுமதித்திருந்ததாவது:

"அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும், கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆதரிப்பதோ அல்லது விமர்சிப்பதோ ஜனநாயக வாழ்முறையின் அடிப்படைகளாகும்.... அத்துடன் வெறுமனே அபிப்பிராய பேதங்களை பொறுத்துக்கொள்வதனை மாத்திரமின்றி அதனை ஊக்குவிப்பதனையுமே ஜனநாயகம் கோருகின்றது.''

"அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும், கொள்கைகளையும் விமர்சித்தல் என்பது உறுப்புரை 14(1) (அ) இன் கீழான பேச்சு மற்றும் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தின்  அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளாகும்:

மேற்குறித்தவாறு. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது அதிமேதகு ஜனாதிபதி அவர்களை அதிகாரப்பூர்வ அவசரகால நிலைப் பிரகடனத்தை மீளப்பெறவும் அரசினாலும் அதனது முகவர்களினாலும் மக்கள் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளதேயன்றி மீறப்படவில்லை எனும் பேச்சு , வெளியீடு மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளடங்கலான கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் போன்ற மக்களது அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும் அழைக்கின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது தன் பங்கிற்கு இலங்கை மக்களது உரிமைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் காணப்படுவதுடன் இக்காலப்பகுதியில் தங்களது உரிமைகள் மீறப்பட்டுள்ளவர்களிற்கு உதவிகளை வழங்குவது உட்பட அதனை முடிவுறுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,
தலைவர்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்


இசுறு பாலப்பட்ட பெந்தி,
செயலாளர்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

PDF File: 

Add new comment

Or log in with...