ஜனாதிபதி வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம்; கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

- பாதுகாப்பு படை பஸ் ஒன்றுக்கு தீ வைப்பு

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய, நுகேகொடை, களனி. கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் நேற்று (31) இரவு 7.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பமானது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,ய் எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, வீடு செல் கோட்டா (Go Home Gota) எனும் வாசகங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறு குழுவாக ஆரம்பமான குறித்த போராட்டத்தில், ஏராளமானோர் குவிந்த நிலையில், கலகம் அடக்கும் குழுவினர் வயவழைக்கப்பட்டு, பொலிஸார், இராணுவத்தின் உதவியுடன் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் பாதுகாப்பு படையினர் வந்தபஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் தோட்டா சூட்டு தாக்குதல் உள்ளிட்ட கலகம் அடக்கும் நடவடிக்கையில், காயமடைந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய, நுகேகொடை, களனி. கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் ஊரடங்கு பெரும் நபர்கள் பொதுமக்கள் பாதுகாப்பை மீறுவதாக கருதி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அத்துடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாக வாகனங்களில் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...